இயக்குநர் ராம நாராயணன் மரணம், அதிர்ச்சியில் தமிழ் சினிமா!

பிரபல திரைப்பட இயக்குநரான ராம. நாராயணன் மாரடைப்பால் காலமானார்.

director-rama-narayanan

சிங்கப்பூரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் அங்கு மரணமடைந்துள்ளார். 9 மொழிகளில் 125 படங்களை இயக்கி சாதனை படைத்தவர் ராம.நாராயணன். இந்தியாவிலேயே அதிக படங்களை இயக்கிய இயக்குநர் இவர்தான்.

குறிப்பாக விலங்குகளை வைத்தும், கிராபிக்ஸ் மூலமும் பல படங்களை இயக்கி அனைவரையும் ரசிக்க வைத்தவர்.

விஜயகாந்த்துக்கு ஆரம்ப காலத்தில் ஏற்றம் கொடுத்த பல படங்களை இயக்கியவர். சர்க்கரை வியாதி மற்றும் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவரை சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் சென்றிருந்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் மரணமடைந்தார். ராம நாராயணனிடம் உதவியாளராக இருந்தவர்தான் நடிகர் ராமராஜன்.

ஆரம்பத்தில் உதவி இயக்குநராக இருந்து பின்னர் இயக்குநராக மாறி அதன் பின்னர் ராமராஜன் நடிகரானார் என்பது நினைவிருக்கலாம்.

இதேபோல இன்னொரு சிஷ்யர் இயக்குநர் பேரரசு. ராம நாராயணனின் 30 படங்களில் பேரரசு உதவி இயக்குநராக இருந்துள்ளார். 1989-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ராம.நாராயணன் காரைக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1990-ம் ஆண்டு தமிழக அரசின் `கலைமாமணி’ விருது இவருக்கு கிடைத்தது. 1995-ம் ஆண்டு இயல், இசை, நாடக மன்ற தலைவராக பதவி வகித்தார். 2005-ம் ஆண்டு முதல் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.

ராம.நாராயணனின் மனைவி பெயர் ராதா. மகன் ராமசாமி. மகள்கள் அன்பு, உமா. அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

Related Posts