இயக்குநர்கள் என்னிடம் வர ஏன் பயப்பட வேண்டும்… அவர்கள் சொல்லும் மாற்றங்களை நான் செய்வேனா மாட்டேனா என்ற சந்தேகம் அவர்களுக்கு எதற்கு? என்று கேள்வி எழுப்பியுள்ளார் இளையராஜா. சமீபத்தில் அவர் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியின் ஒருபகுதி…
உன் சமையல் அறையில் படப் பாடல்கள் குறித்து சொல்லுங்கள்…
நான் கம்போஸ் பண்ண பாடல்களைப் பற்றி மற்றவர்கள்தான் சொல்ல வேண்டும். ஒருவர் இசையமைத்த பாடல்கள் பற்றி அவர் பேச என்ன இருக்கிறது.. அதையெல்லாம் அவர் தன் பாடலிலேயே சொல்லிவிட வேண்டும்.
இந்தப் படத்துக்கு இசையமைக்கும் முன், அதன் மலையாள மூலப் படமான சால்ட் அன்ட் பெப்பர் பார்த்தீர்களா…
இல்லை. நான் அந்தப் படம் பார்க்கவில்லை.
நீங்கள் மிகவும் தேர்ந்தெடுத்துதான் படங்களை ஒப்புக் கொள்கிறீர்கள். ஆனால் பிரகாஷ் ராஜின் படங்களுக்கு மட்டும் அடுத்தடுத்து இசையமைத்துத் தருகிறீர்கள். முதலில் தோனி. இப்போது உன் சமையல் அறையில், அடுத்து மகேந்திரன் இயக்கும் படம்… அவர் மீது மட்டும் உங்களுக்கு ஏன் இவ்வளவு பரிவு?
பிரகாஷ் ராஜ் மீது மட்டுமல்ல, எல்லோர் மீதுமே எனக்கு பரிவு உண்டு. ஏன் சொல்றேன்னா, தனக்கென ஒரு அடையாளமே இல்லாத புதியவர்கள் வந்து கேட்டாலும் இசையமைத்து, அவர்களுக்கு அடையாளம் தந்திருக்கிறேன். எனவே எனக்கு எல்லார் மீதுமே பரிவு உண்டு. ஆனால்.. உண்மை.. பிரகாஷ் ராஜ் மீது எனக்கு அன்பு உண்டு. ஏன்னா அவர் என் மீது வைத்திருக்கும் அன்பும் மரியாதையும் அதிகம். என்னை ஒரு வழிகாட்டியாகவே நினைக்கிறார் அவர்.
பிரகாஷ் ராஜ் மட்டுமல்ல.. பலரும் உங்களை அப்படித்தான் நினைக்கிறார்கள். அவர்களுக்கு உங்கள் அறிவுரைஎன்ன?
அய்யோ.. யாருக்கும் அறிவுரை சொல்லும் தகுதி எனக்கில்லை.
ஏன் சார்… நீங்கள் சாதித்தது ஏராளம்?
ஏன் என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை!
பல ஆண்டுகளாக பல ஆயிரக்கணக்கான ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறீர்கள். ஆனால் உங்கள் பயணம் அதே வேகத்தோடு இன்றும் தொடர்கிறது… நீங்கள் எங்கும் தேங்கி நிற்கவே இல்லை. இதற்கு முதன்மையான காரணம் என்ன?
அது ரொம்ப சாதாரணம்… இது என் சொத்து அல்ல. இது எனது மூளைத் திறனோ, எனது பங்களிப்போ, என் முயற்சியோ அல்ல. இசை என் மூலம் வருகிறது. அது தானாக வருகிறது.. அதை மற்றவர்களுக்குத் தருகிறேன். அவ்வளவுதான்.