நடிகர் தனுஷ், டைரக்டர் கஸ்தூரிராஜாவின் இளைய மகன் ஆவார். இவருடைய அண்ணன், டைரக்டர் செல்வராகவன். கஸ்தூரிராஜா டைரக்டு செய்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் கடந்த 2002-ம் ஆண்டில் தனுஷ் கதாநாயகனாக அறிமுகமானார்.
காதல் கொண்டேன், திருடா திருடி, தங்க மகன், படிக்காதவன், யாரடி நீ மோகினி, மாரி, மாப்பிள்ளை, ஆடுகளம், வேங்கை, மரியான், நையாண்டி, வேலையில்லாத பட்டதாரி உள்பட இதுவரை 29 படங்களில் அவர் கதாநாயகனாக நடித்து இருக்கிறார்.
தற்போது, ‘தொடரி’ என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். ‘கொடி,’ ‘வட சென்னை’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். “இயக்குநர் ஆக வேண்டும் என்பது என் கனவு” என்று தனுஷ் தனது பேட்டிகளில் அடிக்கடி கூறி வந்தார்.
அந்த கனவு அவருக்கு நனவாகி இருக்கிறது. அவர் முதன்முதலாக ஒரு படத்தை டைரக்டு செய்கிறார். அவர் டைரக்டு செய்யும் படத்துக்கு, ‘பவர் பாண்டி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். இதில், ராஜ்கிரண் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகி முடிவாகவில்லை. இந்த படத்தில், தனுஷ் நடிக்கவில்லை. இயக்குநராக மட்டும் பணிபுரிகிறார். படப்பிடிப்பு சென்னையில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
கஸ்தூரிராஜா முதன்முதலாக இயக்கிய ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில்தான் ராஜ்கிரண் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படம், 1991-ல் வெளிவந்தது. 25 வருடங்கள் கழித்து கஸ்தூரிராஜாவின் மகன் தனுஷ் முதன்முதலாக இயக்கும் படத்திலும் ராஜ்கிரண் கதாநாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் தனுஷ், தொடர்ந்து கதாநாயகனாக நடித்துக் கொண்டே படங்களை இயக்கவும் முடிவு செய்து இருக்கிறார்.