நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சையை முன்னிட்டு எதிர்வரும் 16 ஆம் திகதி நள்ளிரவு முதல் 20 ஆம் திகதி பரீட்சை முடிவடையும் வரையில் செயலமர்வுகள், பகுதிநேர வகுப்புக்கள், மாநாடுகள் என்பனவற்றை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்ப்பார்க்கும் வினாக்களை பிரசுரித்தல், அவற்றை வழங்குதல் தொடர்பான விளம்பரங்களை வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முரணாக செயற்படுவோருக்கு எதிராக பரீட்சைகள் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கூறப்பட்ட செயற்பாடுகள் தொடர்பாக எவரும் அவதானித்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்திற்கோ முறையிட முடியும் என்றும் அவ்வாறு முறையிடுவதற்கு 119 மற்றும் 1911 போன்ற இலக்கங்களுக்கு தொடர்பையேற்படுத்தி அறிவிக்க முடியுமெனவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.