இம்சை அரசன் 23-ம் புலிகேசி, அறை எண் 305 கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ஒரு கன்னியும் மூணு களவாணிகளும், புலி ஆகிய படங்களை இயக்கியவர் சிம்புதேவன். ஆனால் இந்த படங்களில் வடிவேலு இரண்டு வேடங்களில் நடித்த சரித்திரமான படமான இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படம் தான் சூப்பர் ஹிட்டானது.
அதனால் விஜய்யின் புலி படத்தை இயக்குவதற்கு முன்பு அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார் சிம்புதேவன். அந்த நேரம் பார்த்து விஜய்யிடமிருந்து அழைப்பு வந்ததால், வடிவேலு பட வேலைகளை கிடப்பில் போட்டு விட்டு, விஜய்யை வைத்து புலி படத்தை இயக்கினார் சிம்புதேவன்.
இந்நிலையில், மீண்டும் கிடப்பில் போட்டிருந்த இம்சை அரசின் 23ஆம் புலிகேசி-2 பட வேலைகளை அவர் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று வடிவேலு அடம் பிடித்துக்கொண்டிருப்பதோடு, அவர் ஹீரோவாக நடித்த தெனாலிராமன், எலி என்ற இரண்டு படங்களும் அடுத்தடுத்து தோல்வியை கொடுத்ததால், அதிலிருந்து மீண்டுவர அவர் சிம்புதேவன் படத்தில் நடிப்பார் என்றும் வடிவேலு வட்டாரம் கூறுகிறது.
மேலும் இப்படத்தை முதல்பாகத்தை தயாரித்த ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கும் என்றும், ஷங்கருடன், லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.