“தற்போதும் இலங்கையின் பிரதம நீதியரசர் நானே. எனக்கு எதிர்காலத்தில் நியாயம் கிடைக்கும். அரசியலுக்கு வரும் எவ்வித நோக்கமும் எனக்கில்லை.” இவ்வாறு மஹிந்த அரச தரப்பினரால் குற்றப் பிரேரணை மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க நேற்றுத் தெரிவித்தார்.
2013 ஜனவரி முதல் தான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் என்றும், தனக்கு அரசியலுக்குள் நுழையும் எண்ணம் எதுவும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தொடர்ந்திருக்கும் வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கு விசாரணை முடிவடைந்த பின்னர், புதுக்கடை வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே ஷிராணி பண்டாரநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:-
“தாய்நாட்டுக்காக 32 வருடங்கள் சேவையாற்றினேன். இதில் 16 வருடங்கள் உயர்நீதிமன்றத்தில் பணிபுரிந்திருக்கிறேன். இக்காலப்பகுதியில் எனக்கு எதிராகவோ அல்லது எனது சேவைதொடர்பிலோ எவ்வித முறைப்பாடும் – குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை.
இதேவேளை, 2013 ஜனவரி 13 ஆம் திகதி முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளேன். எனக்கு சம்பளமோ அல்லது இதரகொடுப்பனவோ வழங்கப்படுவதில்லை. வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதற்கான காரணம் என்னவென்று இன்னும் தெரியவில்லை. நேர்மையுடனும் மனச்சாட்சியின்படியும் நீதிக்கேற்ப 32 வருடங்களாக செயற்பட்ட எனக்கு வழங்கப்பட்ட பரிசு இது தான்.
எனினும், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அத்துடன், நான் அரசியல்வாதி அல்லர். இந்த நாட்டின் சட்டரீதியான 43 ஆவது பிரதம நீதியரசராகவே நான் தற்போதும் இருக்கின்றேன். எனக்கு எதிர்காலத்தில் நியாயம் கிடைக்கும். எனவே, அரசியல் குறித்து கருத்து வெளியிடுவது பொருத்தமல்ல. அவ்வாறானதொரு எண்ணமும் இல்லை” – என்றார்.