இன ரீதியான தாக்குதல்களுக்கு எதிராக வட மாகாண சபையில் பிரேரணை

சிறுபான்மையினராகிய முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்படும் தொடர்ச்சியான இன ரீதியான தாக்குதல்களை தடுத்து நிறுத்தி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வடக்கு மாகாணசபையில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் 94ஆவது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்று வரும் நிலையில், வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறித்த பிரேரணையை முன்வைத்தார்.

இப் பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய அவர், “எண்ணிக்கை அளவில் சிறுபான்மையினராகிய முஸ்லிம் மக்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று அதிகாலையிலும் நுகேகொடை பகுதியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருடைய வர்த்தக நிலையம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிங்கள இனத்தை சேர்ந்த சிலர் இவ்வாறான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

அரசாங்கம், இவ்வாறான தாக்குதலுடன் தொடர்புடையவர்களை இனங்கண்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் ஒரு இன அழிப்புக்கு வழிவகுக்கும் அபாயத்தை உருவாக்கும்” என குறிப்பிட்டார்.

இதனையடுத்து, பிரேரணையை மாகாணசபை உறுப்பினர் ஜயதிலக்க ஆமோதித்ததைத் தொடர்ந்து குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Posts