இன-மத அடையாளங்களை பாதுகாக்க தமிழ்-முஸ்லிம் ஒன்றிணைவு அவசியம்; த.தே.கூட்டமைப்பு

mavai mp inதேசிய இன, மத அடையாளங்களைப் பாதுகாக்க அனைத்துத் தமிழ், முஸ்லிம் மக்களும் ஒன்றிணைந்து தங்களது எதிர்ப்புக்களை வெளிக்காட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கொழும்பு கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் பௌத்த மத தீவிரவாதிகளால் தாக்கப்பட்டமைக்கு வன்மையான கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் துணைத் தலைவர் மாவை. சேனாதிராசா விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தம்புள்ள பள்ளிவாசல் தொடக்கம் கொழும்பு கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் வரை இலங்கையில் 40 இற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களும், மதரஸாக்களும் தாக்கப்பட்டுள்ளன.

பள்ளிவாசல்கள் பலவந்தமாக மூடப்பட்டுள்ளன. முஸ்லிம் வர்த்தக நிலையங்களும், முஸ்லிம் பெண்களும் கூடத்தாக்கப்பட்டுள்ளனர். நாடு சுதந்திரமடைய முன்னரும் அதன் பின்னரும் இடம் பெற்று வந்த தமிழின அழிப்பு நடவடிக்கைகளும் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாம் மதங்களுக்கு எதிரான ஒடுக்குமுறை நடவடிக்கைகளும் மாறி மாறி வந்த அரசு ஆட்சிக் காலங்களிலும் இடம் பெற்று வந்தது.

இன்றைய ஆட்சியில் சிங்கள பௌத்த பேரினவாத மேலாதிக்க நடவடிக்கைகள் உச்சநிலையை அடைந்துள்ளன. இந்த நாட்டில் ஜனநாயக ஆட்சி நடக்கின்றதா என்ற கேள்வியே எழுகின்றது.

இந்தச் சந்தர்ப்பத்திலாவது பௌத்த சிங்கள பேரினவாத அடக்கு முறைக்குள்ளாகியுள்ள தமிழ் முஸ்லிம் மக்களும், இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களைச் சார்ந்தோரும் தத்தம் தேசிய, இன, மத அடையாளங்களைப் பாதுகாக்க ஒன்றுபட்டு தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்ட வேண்டும்.

அமைச்சுப் பதவிகள் உள்ளிட்ட அற்ப பதவி மோகங்களை விடுத்து அடக்கு முறைக்கும் ஒடுக்கு முறைக்கும் உள்ளாகி அழிவின் விளிம்பில் நிற்கும் தேசிய இனங்களைச் சார்ந்து போராட வேண்டும்.

இன, மத, சுத்திகரிப்பு நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தும் வகையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.

Related Posts