இன்று முதல் போக்குவரத்துச் சட்டம் கடுமையாக அமுல்ப்படுத்தப்படும்: போக்குவரத்துப் பொலிஸ்

சாரதிகள் உட்பட போக்குவரத்துத் தொடர்பான சட்டங்களை மீறுவேர் மீது இன்று (திங்கட்கிழமை) முதல் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கொழும்பு நகரப் போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் சுமித் நிஸ்ஸங்க தெரிவித்துள்ளார்.

பாதைச் சட்டத்தை மீறுவோர்களில் அதிகமானவர்கள் முச்சக்கரவண்டி சாரதிகளும், மோட்டார் சைக்கிள் சாரதிகளுமே காணப்படுகிறார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பாதை ஒழுங்கு மீறல் தொடர்பில் முன்னெடுக்கவுள்ள கடுமையான சட்ட அமுலாக்க நடவடிக்கை, ஹைலெவல் வீதி, காலி வீதி, காசல் வீதி, ஆயுர்வேத சந்தி, பஞ்சிகாவத்தை, பேஸ்லைன், சங்கராஜ மாவத்தை உட்பட கொழும்பின் பிரதான பாதைகள், குறுக்குப் பாதைகள் மற்றும் நாட்டிலுள்ள சகல நகர்ப்புற பாதைகள் என்பவற்றிலும் முன்னெடுக்கப்படும்.

இவ்வாறு சட்டத்தை மீறுவோர் தண்டப்பணம் செலுத்துதல், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படல் அல்லது ஆலோசனை சபையில் கலந்துகொள்ளச் செய்தல் போன்ற முறைகளில் தண்டிக்கப்படுவார்கள்.

சட்டத்தை மீறுவோர் எந்தவொரு தண்டனையையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்குமாறும் கொழும்பு நகர போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் மேலும் அறிவித்துள்ளார்.

Related Posts