வற் எனப்படும் பெறுமதி சேர் வரி மற்றும் தேசத்தை கட்டியெழுப்பும் வரி என்பன இன்று முதல் அமுலுக்கு வருகின்றன.
கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி இதற்கான திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இதன்படி முன்பு 11 சதவீதமாக இருந்த வற் வரி, 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வற் வரி பதிவுக்கான மொத்த மற்றும் சில்லறை விற்பனைகளுக்கான குறைமட்ட எல்லை, காலாண்டில் 12.5 மில்லியன் ரூபாவும், முழு ஆண்டில் 50 மில்லியன் ரூபாவுமாகும்.
ஏனைய விநியோகங்களுக்கான வற் வரி பதிவு, காலாண்டில் 3 மில்லியன் ரூபாவிலும், வருடத்தில் 12 மில்லியன் ரூபாவிலும் பதிவாகும்.
வற் வரி அதிகரிப்பானது, சிகரட், மதுபானம், தொலைபேசி சேவைகள், இலத்தரனியல் சாதனங்கள், வாசனைத் திரவியங்கள், ஆபரணங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் பால் மா வகைகள் என்பவற்றில் தாக்கம் செலுத்தும்.
எனினும் சந்தையில் உள்ள இறக்குமதி செய்யப்படுகின்ற மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மாவின் விலை, வற் வரி திருத்தத்தினால் அதிகரிக்கப்பட மாட்டாது.
அத்துடன் வைத்தியர் ஆலோசனை கட்டணம், வைத்தியசாலை அறைக் கட்டணம் என்பவற்றில் இந்த வரி அதிகரிப்பு தாக்கம் செலுத்தும்.
எனினும் சத்திரசிகிச்சைகள், மருத்துவ பரிசோதனைகள், வெளிநோயாளர் சிகிச்சை சேவைகள் என்பவற்றுக்கான கட்டணங்கள் இதனால் அதிகரிக்கப்பட மாட்டாது.
தேசத்தை கட்டியெழுப்பும் வரி 3 சதவீதமாக மாற்றமின்றி தொடரும்.
எனினும் இந்த வரியானது தொலைபேசி கட்டணங்கள் மற்றும் தொலை தொடர்பு சாதனைங்கள் மீதும், மின்சார பாவனையிலும் தாக்கம் செலுத்தும்.
எனினும் மின்சார கட்டணம் இதனால் அதிகரிக்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 82 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வற் வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.