ஈழத்தமிழர்கள் அரசியல் உரிமைகளை பெற்று, சுதந்திர இனமாக வாழ வேண்டுமென்பதற்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவுகூரும் நாள்.
ஈழ விடுதலை வரலாற்றில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்தும், அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புக்களில் இருந்தும் மொத்தமான 30,000 வரையான மாவீரர்கள் ஆகுதியாகியுள்ளனர்.
விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து உயிர்நீத்த முதல் மாவீரன் லெப். சங்கர் (சத்தியநாதன்) உயிர்நீத்த நவம்வர் 27ம் திகதியையே புலிகள் மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தினார்கள்.
தமது அமைப்பிலிருந்து உயிர்நீத்தவர்களின் உடல்களை எந்த சந்தர்ப்பத்திலும் எதிரியின் கைகளில் சிக்க அனுமதிக்ககூடாது, உயிர்நீத்தவர்களை முழுமையான இராணுவ மரியாதைகளுடன் விதைப்பது, அவர்களை ஆத்மார்த்தமாக அஞ்சலிப்பது என விடுதலைப்புலிகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து உயரிய நடைமுறையை புலிகள் பேணினார்கள். இதுவே, 1989ஆம் ஆண்டு மாவீரர் தினமாக பரிணமித்தது.
இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த சமயத்தில் புலிகளின் முதலாவது மாவீரர்தினம் அனுட்டிக்கப்பட்டது. மணலாற்று காட்டுக்குள் இருந்த ஜீவன் முகாமின் ஒரு பகுதியில் விதைக்கப்பட்ட மாவீரர்களின் கல்லறைகள் இருந்தன. அங்குதான் முதலாவது மாவீரர்தினம் அனுட்டிக்கப்பட்டது.
அன்று தொடக்கம் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ம் திகதி மாவீரர் தினமாக அனுட்டிக்கப்படுகிறது. அன்றைய தினமே விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் உரை இடம்பெறும். வருடத்தில் ஒருமுறை மட்டுமே அவரது உரை இடம்பெறுமென்பதால், மாவீரர்தின உரைக்கு உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
மாவீரர் வாரத்தில் மாவீரர் பெற்றோர்கள் கௌரவிக்கப்படுதல் உள்ளிட்ட அந்த குடும்பங்களின் நலனோம்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஒவ்வொரு மாவீரர் தினத்திலும், அந்த வருடத்தின் மாவீரர் தொகையை புலிகள் வெளியிடுவார்கள். உரிமைகோர முடியாத தாங்குதல்களில் மரணமானவர்கள், அப்படியான விபத்துக்களில் மரணமானவர்கள் தொகையை இதில் இணைப்பதில்லை. அது புலிகளால் இரகசியமாக பேணப்பட்ட பட்டியலாக இருந்தது.
2008ஆம் ஆண்டு மாவீரர்தினமே புலிகளால் அனுட்டிக்கட்ட இறுதி மாவீரர்தினமாகும். அந்த வருடத்தின் ஒக்ரோபர் 30ம் திகதி வரை 22,114 மாவீரர்கள் வீரச்சாவடைந்ததாக புலிகள் அறிவித்தனர்.
2009 மே 19ம் திகதி வரையான யுத்தத்தின் இறுதிநாள் வரை சுமார் 30,000 போராளிகள் வீரச்சாவடைந்திருக்கலாமென கருதப்படுகிறது.
2009 ஜனவரியில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த இறுதி துயிலுமில்லத்தையும் இராணுவம் கைப்பற்றியது. இதன் பின்னர் வீரச்சாவடைந்தவர்களின் உடல்கள் இரணைப்பாலையில் விதைக்கப்பட்டன. 2009 பெப்ரவரி இறுதியில் அந்த பகுதியும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வர, அதன் பின்னர் இரட்டைவாய்க்கால் சந்திக்கு அண்மையாக இருந்த கடற்புலிகளின் தளத்திற்கு அருகில் உடல்கள் விதைக்கப்பட்டன.
இந்த பகுதிக்கும் இராணுவம் வந்ததன் பின்னர், புலிகளின் இறுதி துயிலுமில்லத் முள்ளிவாய்க்கால் கப்பலடியில் அமைக்கப்பட்டது. 2009 மே 13ம் திகதி காலை வரை இந்த துயிலுமில்லத்தில் வீரச்சாவடைந்தவர்களின் உடல்கள் விதைக்கப்பட்டன.
2009 யுத்தம் முடிந்த பின்னர், உயிர்நீத்த மறவர்களை அஞ்சலிப்பதை தடுக்க அரசுகள் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டன. சட்டம், பாதுகாப்புத்துறை ஆன மட்டும் முயற்சித்தன. கல்லறைகளும், நினைவிடங்களும் சிதைக்கப்பட்டன. இருந்தாலும், தமிழர்கள் நெஞ்சில் சுமக்கும் துயிலுமிடங்களில் அந்த தியாகிகளை விதைத்து அஞ்சலித்து வருகிறார்கள்.