முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு விஜயம் செய்து நீதியரசாக கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
தற்போதய பிரதம நீதியரசர் மொஹான் பிரீஸ் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உயர் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று காலை ஆர்பாட்டம் இடம்பெற்றுள்ள நிலையில் சிராணி பண்டாரநாயக்க உயர் நீதிமன்றத்திற்கு விஜயம் செய்து கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
இவர் நாளை பிரதம நீதியரசராக பதவியில் இருந்து ஓய்வுபெறவுள்ளார், இருப்பினும் இதுவரை காலமும் பிரதம நீதியரசராக பதவியில் இருந்த மொஹான் பிரீஸ் பதவி விலகாத நிலையில் இவர் கடமைகளை பொறுப்பேற்றுள்ளமையால் நாட்டில் தற்போது இரண்டு பிரதம நீதியரசர்கள் கடமையில் உள்ளனர்.
இதேவேளை சிராணி பண்டாரநாயக்க நாளை பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ள நிலையில் அவரின் பதவிக்கு உயர் நீதிமன்ற நீதியரசர் கே. ஸ்ரீபவன் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஷிராணி பண்டாரநாயக்க மீதான தடைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இன்று 28ம் திகதி தொடர்ந்தும் கடமையை பொறுப்பேற்கலாம் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அதன் அடிப்படையிலேயே அவர் இன்று நீதிமன்றம் சென்று கடமைகளை பொறுப்பேற்றதாகவும் அரசாங்கத்தின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.