இன்றும் பணிப்பகிஷ்கரிப்பு, அவசர சேவையும் தேவைப்படின் நிறுத்தப்படும் : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

ஒரு சில வைத்தியசாலைகளைத் தவிர நாட்டிலுள்ள சகல வைத்தியசாலைகளிலும் இன்றும் (23) பணிப்பகிஷ்கரிப்பு தொடர்வதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அரச வைத்தியசாலைகளுக்கு சிகிச்சை பெற வருவதா? இல்லையா? என்பதை நோயாளர்கள் தீர்மானம் எடுத்துக் கொள்ள வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த பணிப்பகிஷ்கரிப்பு நேற்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகியது. சைட்டம் எதிர்ப்பில் ஈடுபட்ட பல்கலை மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்தே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்று வருகின்றது.

இன்று பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெறாத வைத்தியசாலைகள் உள்ளன. சிறுவர் வைத்தியசாலை, மகப்பேறு மருத்துவ மனை மற்றும் புற்றுநோய் வைத்தியசாலை என்பன இயங்குகின்றன. ஏனைய வைத்தியசாலைகளிலும் டெங்கு சிகிச்சைப் பிரிவு மற்றும் அவசர சேவைகள் என்பன இயங்குகின்றன.

எமது பணிப்பகிஷ்கரிப்பு தோல்வி என்றோ, இந்தப் பணிப்பகிஷ்கரிப்பை வேறு விதமாக சித்தரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், தற்பொழுது மேற்கொண்டு வரும் அவசர சேவையும் நிறுத்தப்படும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

Related Posts