இன்னும் அமைக்கப்படவில்லை லிப்ற்; சிறுவர் விடுதியை ஆரம்பிக்க தடை யாழ்.போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் தெரிவிப்பு

யாழ்.போதனா வைத்தியசாலையில் நான்குமாடிக் கட்டடத் தொகுதியின் நான்காவது மாடியில் சிறுவர்களுக்கான மருத்துவ விடுதியை ஆரம்பிப்பதற்கான சகல பணிகளும் பூர்த்தியடைந்து பல மாதங்களாகிவிட்டது.இருந்தபோதிலும், “லிப்ற்’ அமைக்கப்படாததனால் குறித்த சிறுவர் மருத்துவ விடுதியை ஆரம்பிக்க முடியாதுள்ளது இவ்வாறு போதனா வைத்திய சாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ். ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
குறித்த விடுதியில் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் லிப்ற் அமைப்பதற்கான பணத்தை இலங்கை மின்சார சபை பெற்றிருந்தது. 6 மாதங்களில் “லிப்ற்’ அமைத்துத் தருவதாகவும் மின்சார சபை உறுதியளித்திருந்தது. ஆனால் இது வரை அதற்கான ஆரம்ப வேலைகள் கூட இடம் பெறாமல், இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

நான்காவது மாடியில் திருத்தப் பணிகள் நிறைவுபெற்று பல மாதங்களாகிவிட்டன. அங்கு குழந்தைகளுக்கான மருத்துவ விடுதியை ஆரம்பிப்பதற்கு ஏற்றமுறையில் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துவிட்டன.

ஆனால் “லிப்ற்’ அமைக்கப்படாததனால் அங்கு விடுதியை ஆரம்பிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையை வைத்தியசாலை எதிர்கொண்டுள்ளது. ஏனைய மாடிகளுக்கு நோயாளர்களை தூக்கிச் செல்வதில் ஊழியர்கள், பணியாளர்கள் பெரும் இன்னலை எதிர்கொண்டுள்ள நிலையில் நான்காவது மாடிக்கு தூக்கிச் செல்வது சாதாரணவிடயமல்ல.

குழந்தைகளைப் பராமரிப்பவர்கள், பார்க்க வருபவர்கள், வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் கூட இதனால்பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலையுள்ளது என்றார் பதில் பணிப்பாளர்.

எனவே இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவணக்க, குறித்த “லிப்ற்’ பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைத்தியர்கள், நோயாளர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts