அரசியல்வாதிகள் மற்றும் அரச ஊழியர்கள் ஊழல் மோசடி செய்து மக்கள் மத்தியில் மறைந்திருக்க முடியாது என்பதால் அனைவரும் லஞ்ச, ஊழலில் ஈடுபடாது பார்த்துக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சர்கள் நேற்று பதவியேற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரதமருடன் நடத்திய கலந்துரையாடலின் பயனாக அரச கூட்டுத்தாபனம், திணைக்கள பணிப்பாளர்கள், தலைவர்கள் பொதுகுழு ஒன்றின் மூலம் நியமிக்கப்படுவர் என்றும் நியமனம் தொடர்பான கோரிக்கையை அந்த குழுவிடம் முன்வைக்க முடியும் என புதிய அமைச்சர்களிடம் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பதவியின் தரத்தை அடிப்படையாகக் கொண்டு நியமனம் வழங்கப்படும் என ஜனாதிபதி கூறினார்.
புதிய அமைச்சரவையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு 18 அமைச்சுக்களும் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சுகள் 18ம் பேச்சுவாத்தை மூலம் பெறப்பட்டதாகவும் ஜனாதிபதி கூறினார்.
பெற்ற 33 அமைச்சுக்களில் 26 அமைச்சுக்களை மாத்திரம் ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக் கொண்டு மிகுதி 6 அமைச்சுக்களை ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுவைத்த சிறுகட்சிகளுக்கு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அமைச்சுப் பதவிகள் பெற்றவர்கள் மகிழ்ச்சி அடைவதுபோல் அமைச்சுப் பதவி கிடைக்காதவர்கள் மகிழ்ச்சி அடைய வேறு வழிகள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
ஒப்பந்தத்தின்படி இரண்டு வருடங்களே தேசிய அரசாங்கம் செயற்படும் என்றபோதிலும் ஐந்து வருடங்கள் அதனை நீடிப்பதே தமது இலக்கு என்னும் அரசியல் யாப்பின்படி 5 வருடங்களுக்கு பாராளுமன்றை கலைக்க முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நல்லாட்சி, ஜனநாயகம், சுதந்திரம் போன்றவை எமது நோக்கு என்றும் ஊழல் மோசடி இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும் என்றும் அதற்கு மனசாட்சிக்கு விரோதமின்றி அர்ப்பணிப்புடன் பணியாற்றுமாறும் புதிய அமைச்சர்களிடம் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.