இனிவரும் எந்தத் தேர்தலிலும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு யாழ் வணிகர் கழகம் ஆதரவு வழங்காது!!!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் செயற்பாடுகளால் யாழ்ப்பாணம் வணிகர் கழகம் அதிருப்தி கொண்டுள்ளது. இதனால் இனிவரும் தேர்தல்களில் தமிழ் அரசுக் கட்சிக்கு யாழ்ப்பாணம் வர்த்தகர்கள் ஆதரவளிக்கமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

“யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தால் முன்மொழியப்பட்ட வர்த்தகர்களின் பெயர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான வேட்பு மனுவில் உள்வாங்கப்படவில்லை. முஸ்லிம் வர்த்தகர்கள் நால்வர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் வேட்பாளர்கள் உள்ளீர்க்கப்படாமை குறித்து தமிழ் அரசுக் கட்சி வருத்தம் வெளியிட்டது.

எமது கழகத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகி வடக்கு மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினராக உள்ளார். எனினும் யாழ்ப்பாண நகர வர்த்தகர்களின் மிக முக்கிய நிர்வாக அலகான யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் எமது கழகத்தின் வர்த்தகர்களுக்கு இடமளிக்காமல் எமது நம்பிக்கைக்கு தமிழ் அரசுக் கட்சி ஏமாற்றிவிட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்துக்கு அடுத்தபடியாக பலம்பொருந்திய சமூகம் யாழ்ப்பாணம் வர்த்தகர்கள்தான். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் ஆயுத ரீதியாக மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் அரசுக் கட்சியை யாழ்ப்பாணத்தில் வரவேற்று அதற்கு பேராதரவை வழங்கியது யாழ்ப்பாணம் வணிகர் கழகம்தான்.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் கோரிக்கையை தமிழ் அரசுக் கட்சி புறந்தள்ளிவிட்டது.

இனிவரும் எந்தத் தேர்தலிலும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு யாழ்ப்பாணம் வணிகர் கழகம் ஆதரவு வழங்காது. யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் மாகாண சபைத் தேர்தலில் வணிகர் கழகம் தனியாகப் போட்டியிடும்” என்று யாழ்ப்பாணம் வர்த்தக சமூகம் தெரிவித்தது.

Related Posts