இனியும் உழைத்து சீவிப்பதற்கான தெம்பு எமக்கில்லை. எமக்கான வாழ்வாதாரம் கேப்பாப்பிலவில் எமது காலடிக்குள் காணப்படுகிறது. எனவே நாம் நிம்மதியாக வாழ்வதற்கு எமது பூர்வீக காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமது பூர்வீகக் காணிகளை மீளக் கையளிக்குமாறு கோரி, முல்லைத்தீவு ராணுவத் தலைமையகத்திற்கு முன்னாள் கேப்பாப்பிலவு மக்கள் கடந்த முதலாம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டம் இன்று (வியாழக்கிழமை) 16ஆவது நாளாக தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், இன்றைய தினம் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மேலும் தெரிவிக்கையில், “சொந்த இடங்களிலேயே எமது நிம்மதி தங்கியிருக்கிறது. எனவே எமது பூர்வீக காணிகளிலிருந்து ராணுவம் வெளியேற வேண்டும். எமது கஷ்டங்களை போக்க அரசாங்கம் எம்மை திரும்பிப் பார்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டனர்.