“காணி சுவீகரிப்பு இனிமேலும் தொடருமாக இருந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும். இதனை நாம் நல்லாட்சி அரசுக்கு இங்கிருந்து எச்சரிக்கின்றோம்.” – இவ்வாறு வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்று சபையில் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையில் நேற்று எடுத்துக் கொள்ளப்பட்ட பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரேரணை மீது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வடக்கில் எந்தவொரு காணிகளும் சுவீகரிக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முதலமைச்சருக்கு தெரிவிக்கின்றார். ஆனால், நடைமுறையில் காணிகளைச் சுவீகரிக்கின்றார். இரட்டை வேடத்தைப் போட்டுக் கொண்டிருக்கின்றார். தொடர்ச்சியாக காணிகள் சுவீகரிக்கப்படுகின்றது.
இதனைத் தடுப்பதற்காக நாம் அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருக்கின்றோம். இதன் உச்சக்கட்டமாகத்தான், அரச அதிபரை அவரது அலுவலகத்தில் பூட்டி வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டோம். அரச அதிபர் வேதநாயகனுக்கு எதிரானவர்கள் நாம் இல்லை. அவரது கதிரைக்கு எதிராகவே எமது நடவடிக்கையை மேற்கொண்டோம்.
இதனால் அரச அதிபர் வேதநாயகனுக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்புக் கோருகின்றோம். காணி சுவீகரிப்பு இனிமேலும் தொடருமாக இருந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும். இதனை நாம் நல்லாட்சி அரசுக்கு இங்கிருந்து எச்சரிக்கின்றோம். இது போன்று இனிமேல் போராட வேண்டுமா? அல்லது பாய வேண்டுமா? என்பதை முதலமைச்சரே நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இந்த விடயங்கள் தொடர்பில் அரசுடன் பேசி முடிவெடுங்கள்” – என்றார்.