இனவாதிகளுக்காக சிறுபான்மை இனத்தவரை வீதியில் இறக்கக் கூடாது ; விஜயகலா

நல்லாட்சி அரசாங்கம் ஓரிரு இனவாதிகளுக்காக சிறுபான்மை இனத்தவரை வீதியில் இறக்கக்கூடாது என சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் அரசாங்கத்தை விமர்சித்து நல்லாட்சியை முடக்குவதற்கு முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ள அவர், இதனால் எதிர்கட்சியினர் தமது தனிப்பட்ட தேவைக்காக மக்களை வீதியில் இறக்குவதற்கு முஸ்தீபுகளை மேற்கொள்வதாகவும், இவற்றுக்கு மக்கள் விலைபோகக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான, இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியில் இருப்பவர்களுக்கு நாட்டு மக்கள் விலைபோகக் கூடாது எனக் குறிப்பிட்ட அவர், இதனால் சிறுபான்மையின மக்களே பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் சிறுபான்மையினரை மன ரீதியான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் தொந்தரவுகள் மேற்கொள்ளப்படுவதாக கடந்த வருடம் பிரதமரின் யாழ். விஜயத்தின் போது சுட்டிக்காட்டப்பட்டது.

இது தொடர்பில் இராணுவத் தளபதியை அங்கிருந்து தொடர்புகொண்ட பிரதமர் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறக்கூடாது எனப் பணித்திருந்தார்.

இவ்வாறான நிலையில் புலனாய்வுப் பிரிவினரின் தொந்தரவுகள் இன்னமும் தொடர்வதாக முறைப்பாடுகள் எதுவும் இல்லை என்றும் அவ்வாறு இருந்தாலும் அதுகுறித்து பொலிஸ் நிலையங்களில் முறையிட முடியும் எனவும் இராஜங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

வரவு – செலவுத் திட்டத்தில் வட பகுதியில் 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைக்கப்படும் வீடு தமிழ் மக்கள் வாழக்கூடிய காலநிலைக்கு ஏற்றதாகவும், அவர்களுக்கு முழுமையான பயனை வழங்கக் கூடியதாகவும் இருக்கவேண்டும்.

இதனைவிடுத்து வியாபாரத்துக்காக மக்களுக்கு பலனளிக்காத வீடுகள் அமைக்கப்படக்கூடாது என்றும் கூறினார்.

இதேவேளை, வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் கல்வித்துறையில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் பல ஒதுக்கீடுகளைச் செய்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு டப் உபகரணங்கள் வழங்கப்படுவதை எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் விமர்சிக்கின்றனர்.

“உங்களுக்குத் தேவையில்லை என்றால் மௌனமாக இருங்கள். மலையகம், வடக்கு, கிழக்கில் உள்ள பல கிராமங்களில் இவற்றைக் காணாத பல மாணவர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு நன்மையளிப்பதற்கு இடமளியுங்கள் என்றும் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts