இனவாதம் போக இனிமேல் பிரதேசவாதம் கிளப்பாதீர்கள் – சரவணபவன்

saravanabavanவடமாகாணத்தில் வாக்குரிமை அற்றவர் விக்னேஸ்வரன். அவர் கொழும்பில் வாழ்பவர். வடக்கு மாகாணத் தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறுகிறார் அமைச்சர் பஸில் ராஜபக்க்ஷ.

அப்படியானால் நான் அமைச்சரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன். எங்கள் கடல் எல்லைக்குள் சீனாவும், ஜப்பானும் மீன்பிடிக்க என்ன தகுதியைக் கொண்டுள்ளன? இதற்கு அமைச்சர் பதில் கூறியாக வேண்டும்.

இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது;

வடமாகாண சபைத் தேர்தலில் வாக்குக் கேட்பதற்காக வந்துள்ள அமைச்சர் பஸில் ராஜபக்­, தமது கைப்பொம்மைகளுக்காக இப்படி பிரதேசவாதம் பேசக்கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களது எதிர்காலம் கருதி தூர நோக்குடன் செயற்பட்டு வருகிறது என்பதை உணர்வுள்ள தமிழ் மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

அவர்களுக்கு நீங்கள் எதைக் கூறினாலும் பரவாயில்லை. காரணம் மக்கள் தமது முடிவை ஏற்கனவே எடுத்து விட்டார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை நிதானமாகச் சிந்தித்துத்தான் வடக்கு தேர்தலில் போட்டியிடுவது, அதில் யாரைப் போட்டியிட வைப்பது போன்ற முடிவுகளை எடுத்தது.

முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் உயர் நீதி மன்ற நீதியரசர் வி.விக்னேஸ்வரனை தேர்வு செய்தமைக்கும் உண்மையான பல காரணங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் அரச தரப்புக்குச் சொல்லி தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் எமக்கில்லை.

அமைச்சர் பஸில் கூறுகிறார், வடக்கு மாகாணத்தில் வாக்குரிமை அற்ற ஒருவர் தேர்தலில் முதலமைச்சராகப் போட்டியிடுகிறார் என்று. வடக்கைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தவில்லை என்று.

அப்படியானால் தென்னிலங்கையில் வாக்குரிமை கொண்ட ஒருவர்தான் ஜனாதிபதியாகப் போட்டியிட முடியும் என்று இவர் சொல்கிறார் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நாட்டில் குடியுரிமை பெற்ற ஒருவர் கொண்டுள்ள தகுதிகளைக் கூட அறியாது பேசுகின்றார்.

சீனாவுக்கும், ஜப்பானுக்கும் கொழும்பை அடைவு வைத்து விட்டு வாழ்க்கை நடத்தும் அரசு பிரதியுபகாரமாக சீனர்களுக்கும், ஜப்பானியர்களுக்கும் எமது கடலைத் தாரைவார்த்து கொடுத்துள்ளது. இது எந்த வகையில் நியாயமானது? இந்த நாட்டில் குடியுரிமையே இல்லாத சீனாக்காரர்கள் எமது கடலில் மீன் பிடிக்கலாம். விக்னேஸ் வரன் போட்டியிடக் கூடாதா?

இதிலிருந்து நாம் ஒன்றை தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும். இனவாதம், பிரதேச வாதம் பேசி பிரிவினையை ஏற்படுத்துபவர்கள் யார் என்று. யாழ்ப்பாணம், கொழும்பு, தென்னிலங்கை என்று வேறுபடுத்தும் இவர்கள் தான் எமக்குத் தீர்வு பெற்றுத்தரப் போகிறார்களா? இப்படிப் பிரிவினை பேசுபவர்களைத் தான் கடவுள்கள் என்று நம்பிக் கொண்டு தன்மானம் இழந்து செயற்படுகின்றனர் சிலர்.

இணக்க அரசியல் என்று கூறி சிங்களவர்களுக்கு எல்லாவற்றையும் தாரை வார்த்து கொடுத்துவிட்டு தமிழ் மக்களை இந்த நாட்டை விட்டு விரட்டவே இவர்கள் முயற்சிக்கின்றார்கள்.

நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில் மக்கள் உண்மை நிலையறிந்து வாக்களிக்க வேண்டும். மக்களை சூழ்ச்சியால் வெல்லலாம் என்று துடிக்கும் ஆளும் தரப்பு வேட்பாளர்களைப் புறக்கணித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பேராதரவு வழங்கி, தமிழனின் இருப்பைப் பலப்படுத்துவோம். என்றார்.

Related Posts