இனவாதத்தை கக்கும் பொதுபல சேனா என்னை எவ்வாறு கைதுசெய்யக் கோரும் -மன்னார் ஆயர்

முஸ்லிம் மக்கள் மீது அடக்குமுறையையும், தமிழ் மக்கள் மீது இனவாதத்தையும் பொதுபல சோனா போன்ற அமைப்புக்கள் ஏவி வருகின்ற நிலையில் சகல மதங்களையும் மேன்மையாக மதிக்கும் என்னைக் கைது செய்யக் கோருவது எந்த வகையில் நியாயமாக அமையும்? என்று மன்னார் ஆயர் இராயப்பு யோசப் கேள்வி எழுப்பியுள்ளார்.

mannar-ayar

மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப்பை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கூறியிருந்த கருத்துக்கு பதிலளிக்கும் முகமாகவே ஆயர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

நாட்டையும் படையினரையும் நான் யாருக்கு காட்டிக் கொடுத்தேன் என்பதை மேற்படி அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

இன்று முஸ்லிம் மக்கள் மீதும் தமிழ் மக்கள் மீதும் இனவாதத்தைக் கக்கி வரும் பொதுபல சேனா போன்ற அமைப்புகள் மதம் என்ற பெயரால் செய்துவரும் அடாவடித்தனங்களையும் கொடுமைகளையும் நிறுத்துவதன் மூலமே இந்த நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் இன ஒற்றுமையையும் கொண்டுவர முடியும்.

உண்மையைச் சொல்கின்றவர்களை, நீதிக்காக போராடுகின்றவர்களை கைது செய்ய வேண்டுமென்றால் இந்த நாட்டில் உண்மையையும் நீதியையும் யார் காப்பாற்றுவது? பௌத்த சிங்கள நாடு என்ற இனவாதத்தைக் கக்கிக் கொண்டிருக்கின்ற பொதுபல சேனா போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை ஏன் அரசாங்கம் இன்னும் கைது செய்யாமல் இருக்கின்றது.

அரசியலமைப்புக்கு எதிராகப் பேசுகின்றவர்களை ஏன் கைது செய்யக் கூடாது. இந்த நாட்டின் எல்லாச் சமயத்தவரையும் சரிசமமாக மதிக்க வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டுமென இலங்கை அரசியல் அமைப்பு எடுத்துக் கூறுகின்ற போது இலங்கை ஒரு பௌத்த நாடு பௌத்த மக்கள் தான் இங்கு வாழ முடியுமென்று கூறுகின்ற இனவாத அமைப்புகள் பற்றி நாம் என்ன செய்ய முடியும்

சிங்களப் பேரினவாதச் சிந்தனையுடன் செயற்பட்டுக் கொண்டிருப்பவர்கள் பொதுபல சேனா போன்ற அமைப்புக்களாகும். எனவே இவ்வகை அமைப்புக்கள் எதைக் கூறிக்கொண்டிருந்த போதும் உண்மைகள் பொய்யாகப் போவதில்லை. அநீதிகள் நீண்டகாலம் நிலைகொள்வதில்லை

ஆகவே என்னைக் கைது செய்யும்படி பொதுபல சேனா கூறுவதைக் கேட்டு நான் கவலை கொள்ளவுமில்லை. ஆத்திரப்படவுமில்லை. நான் எப்போதும் இனவாதம் கொண்ட போக்கில் நடந்ததுமில்லை, நடப்பதுமில்லை. எல்லா மதங்களையும் மேன்மையான மதங்களாக மதிக்கும் சிந்தனை கொண்டவன்.

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் விரும்பினால் நேரடியாக என்னோடு கதைக்கட்டும். உரிய விளக்கத்தைக் கொடுக்க நான் காத்திருக்கின்றேன். அவர் என் மீதுள்ள குற்றத்தை எடுத்துக்கூறி நான் குற்றமிழைத்தேனா? நாட்டைக் காட்டிக் கொடுத்தேனா? என்பதை கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும்.

நான் ஆன்மீக மார்க்கத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு பொது மனிதன் கிறீஸ்தவ மதத்தின் போதனைகளால் வளர்க்கப்பட்டவன். என்னிடம் எந்த இன மத பேதமும் கிடையாது. வாய்ப்பு ஏற்படும் பட்சத்தில் ஞானசார தேரருடன் உரையாடக் காத்திருக்கின்றேன்.

இனவாதத்தை சமயத்தின் பேரால் தூண்டுகின்றவர்கள் இந்த நாட்டில் முரண்பாடு ஒன்றை வளர்க்கவே ஆயத்தமாகின்றார்கள். ஒவ்வொரு சமயமும் இந்த நாட்டில் கடைப்பிடிப்பதற்கும் இருப்பதற்கும் நூறு வீதமான உரிமையுண்டு. அதுமட்டுமன்றி சமயக் கொள்கையை பரப்புவதற்கும் தனிப்பட்ட உரிமையுண்டு.

ஆகவே அதை மறுத்துரைத்து தங்கள் மதம் தான் நிலைகொள்ள வேண்டுமெனக் கருதுவதும் கூறுவதும் நன்மைகளைத் தரப்போவதில்லை என்றார்.

Related Posts