வடமாகாண சபையில் காணி சுவீகரிப்பை நிறுத்துவதுடன், திட்டமிட்ட குடியேற்றமும் நிறுத்தப்பட வேண்டும் என்ற பிரேரணை உள்பட 29 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் ஆறாவது அமர்வு நேற்று சபையின் தவிசாளர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையின் கைதடியிலுள்ள மாகாண சபைக் கட்டிடத்தில் இடம்பெற்றது.
அதன் போதே உறுப்பினர்களால் குறித்த 29 பிரேரணைகளும் பிரேரிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் சுவீகரிக்கப்படுவதை நிறுத்துவதுடன், இனப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கிலான திட்டமிட்ட குடியேற்றத்தை கண்டித்து இதனைத் தடுத்து நிறுத்த வடமாகாணசபை முன்வர வேண்டும், அத்துடன் ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையினை மீள் இயக்க வேண்டும் என்ற பிரேரணை உட்பட நான்கு பிரேரணைகள் உறுப்பினர் து.ரவிகரனால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதனால் வழிமொழியப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து இராமேஸ்வரத்திற்கும் தலை மன்னாருக்குமிடையிலான கப்பல் போக்குவரத்தை மீள ஆரம்பிப்பதற்கு இந்திய அரசும் இலங்கை அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிரேரணையேடு மக்களாது போக்குவரத்து நலனை கருத்திற் கொண்டு பலாலி மற்றும் திருகோணமலைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விமான சேவையினை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்றும் உறுப்பினர் சிவாஜலிங்கத்தால் தீர்மானம் கொண்டுவரப்பட்டதுடன் இதனை உறுப்பினர் சர்வேஸ்வரன் வழிமொழிந்ததுடன் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகமாக இடம்பெற்று வருவதுடன் அதனை நிறுத்துவதற்காக பலமான பெண்கள் அமைப்பு ஒன்றையும் வடமாகாணத்தில் அமைப்பதற்கு சபை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற பிரேரணையை முன்வைத்ததுடன் வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள விவசாயப் பண்ணைகள் விடுவிக்கப்பட்டு மாகாண சபையின் ஆளுகைக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்ற பிரேரணையை உறுப்பினர் அனந்தி சசிதரனால் கொண்டு வரப்பட்டது இதனை அவைத் தலைவர் கந்தையா சிவஞானம் வழிமொழிந்தார்.
மேலும் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள மூன்று பாடசாலைகளுக்கு அமெரிக்கா தூதரக உதவியுடன் அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன அனுமதி வழைங்கியிருந்த நிலையிலும், அமைச்சராவையால் இது நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. எனவே ஜனாதிபதி, கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை உட்பட மூன்று பிரேரணைகள் அவைத் தலைவர் சிவஞானத்தால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து இந்திய, இலங்கை மீனவர்கள் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இதற்கு வடக்கு முதலமைச்சர் தலைமையில் குழு நியமிக்கப்பட்டு இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தீர்வை ஏற்படுத்த வேண்டும்.அத்தோடு வடக்கு மாகாணத்ரதை பிரதிபலிக்கும் வகையில் தபால் அமைச்சருடன் கலந்துரையாடி அஞ்சல் முத்திரை வெளியிட வேண்டும் இந்த இரண்டு பிரேரணைகள் சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரனால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
மாந்தை மேற்கு பிரதேச செயலகர் பிரிவில் பிரதேச சபை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் இது காலத்தின் கட்டாயம். எனவே இதனைக் கருத்திற் கொண்டு வடமாகாண சபை பிரதேச சபை ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற பிரேரணையை உறுப்பினர் டெனிஸ்வரன் சபையில் பிரேரித்தார் இதனை உறுப்பினர் அயூப் அஸ்மின் வழிமொழிய தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இத்தகைய பிரேரணைகள் உள்ளிட்ட 29 பிரேரணைகள் கொண்டு வரப்பட்டு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது