இனத்தின் ஒற்றுமையை வலுப்படுத்தும் நாளாக மே 18ஆம் திகதி : முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு

எதிர்காலத்தில் தமிழ் இனத்தை ஒன்றிணைக்கும் ஒரு நாளாக மே 18ஆம் திகதி விளங்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்புவிடுத்துள்ளார். முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளின் நினைவேந்தல் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவ்வறிக்கையில்,

“முள்ளிவாய்க்கால் நிகழ்வினை அனுஷ்டிப்பதில் முரண்பட்ட சில தரப்பினர், அந்நிகழ்வின் உண்மைத்தன்மையை அறிந்து ஒன்றுபட்டமையைப் போல, எதிர்காலத்தில் எமது இனத்தை ஒன்றிணைக்கும் நாளாக மே 18ஆம் திகதி விளங்க நாம் ஒன்றுபட வேண்டும்.

நினைவேந்தல் நடைபெறும் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு அருகில் மே 18ஆம் திகதி காலை 10.15 மணிக்கு யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து விசேட பேருந்து சேவைகள் மூலம் மக்கள் அழைத்துவரப்பட இருக்கின்றனர்.

பின்னர் காலை 11.00 மணியளவில் முதலமைச்சரால் கையளிக்கப்பட்ட ஈகைச் சுடரை உறவுகளை இழந்த வயோதிபத் தாய் ஏற்றுவார். அதனைத் தொடர்ந்து ஏனைய சுடர்களை உறவுகளை இழந்தோர் ஏற்றுவர். இதன்போது மலர்தூவி அஞ்சலியும் செலுத்தப்படும். அவ்வேளையில் நினைவு இசை எழுப்பப்படும்.

அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் உரை நிகழ்த்துவார். அதனையடுத்து நினைவுதின நிகழ்வுகள் யாவும் நிறைவுபெறும்.

இந்நினைவுதினத்தில் சகல மக்களும் கடையடைப்பு, கைகளில் கறுப்புப் பட்டியணிதல், கோயில்களில் பிரார்த்தனையில் ஈடுபடுதல் மற்றும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டு, குறித்த தினத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகொள்ள அனைவரும் ஒன்றுபட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Posts