இந்த வருட இறுதிக்குள் வடக்கில் மீள்குடியேற்றம் நிறைவுக்கு வந்துவிடும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
மீள்குடியேற்ற அமைச்சின் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் காணிகளற்றவர்களாக 936பேர் இனங்காணப்பட்டுள்ளனர். எனினும், 971 வீடுகளைக் கட்டுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இதனடிப்படையில் கீரிமலைக்கு அருகில் உள்ள காங்கேசன்துறை பகுதியில் இராணுவத்தின் உதவியுடன் வீடுகள் அமைக்கப்படுகின்றன.
மேலும், 104 வீடுகள் பலாலி வடக்குப் பகுதியில் அமைக்கப்படுகின்றன. இவை ஒக்ரோபர் மாதமளவில் நிறைவுபெறும்.
இதைவிட, நிலமற்ற குடும்பங்களை குடியேற்றம் செய்வதற்கு 250 காணித்துண்டுகளை அதிகாரிகள் காங்கேசன்துறை சீமெந்துக் கூட்டுத்தாபனத்திற்கு அருகில் சில நிலப்பரப்புக்களை இனங்கண்டுள்ளனர்.
அங்கு டிசம்பர் மாதத்திற்குள் 482 குடும்பங்களுக்கான வீட்டுத்தேவைகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன. இதற்கிடையில் காங்கேசன்துறை, பளை, வலிகாமம் வடக்கு மற்றும் தையிட்டி ஆகிய இடங்களில் 450 ஏக்கர் நிலத்தை விடுவிக்க பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.