இந்திய வீடமைப்பு திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இந்திய தூதரகமும், செஞ்சிலுவை சங்கமும் இணைந்து முன்னெடுத்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நாளை உயர்மட்ட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தகவல் தொடர்பாடல் மற்றும் மனிதவள இராஜதந்திர சிரேஷ்ட முகாமையாளர் மஹேஸ் ஜோன்னி தெரிவித்துள்ளார்.
செஞ்சிலுவை சங்கத்தின் நிர்வாகிகள் தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாகவும், அதன்பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள உத்தியோகத்தர் தொடர்ந்தும் செஞ்சிலுவை சங்கத்தின் கிளிநொச்சிக் கிளையில் பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளபோதிலும், அவர்கள் சுய விருப்பில் விடுமுறையில் சென்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
வீடமைப்பு திட்டத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான நிதி வழங்குவதில் ஏற்படும் தாமதம் குறித்து தான் பலமுறை செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அறிவித்துள்ளதாக அருட்தந்தை எஸ்.எம்.பி.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் வீடமைப்புத் திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் கட்டுமானப்பொருட்களை குறிப்பிட்ட ஒரு வியாபார நிலையத்திலேயே கொள்வனவு செய்யுமாறு செஞ்சிலுவை சங்க அதிகாரிகளால் வற்புறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் கொள்வனவு செய்யும் கட்டுமானப்பொருட்கள் தரம் குறைந்ததாக காணப்படுவதோடு, அதற்கான பற்றுச்சீட்கள் வழங்கப்படுவதில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.