யாழ். மாநகர சபை எல்லைக்குள் இந்திய வியாபாரிகளின் வியாபார நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளது என மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.அத்துடன் நடை பாதை வியாபாரமும் யாழ். மேயரினால் தடைசெய்யப்பட்டுள்ளது என யாழ். வணிகர் கழக தலைவர் ஜெயசேகரன் தெரிவித்தார்.
யாழ். வணிகர் கழகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“நடைபாதை மற்றும் இந்திய வியாபாரிகளினால் யாழ். மாவட்ட வர்த்தகர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவதாக வணிகர் கழகத்திற்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டன. இந்த பிரச்சினைகள் பற்றி வணிகர் கழகம் யாழ். மேயர் மற்றும் மாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவித்தது.
இதனையடுத்து, யாழ். மாநகர சபையினால் இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விடயங்களில் கவனம் செலுத்துமாறு யாழ். பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் சிகேராவிற்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
இதேவேளை, அத்துமீறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகர சபையினால் நிர்ணயிக்கப்பட்ட இடங்கள் தவிர வேறு இடங்களில் விளம்பரங்கள் காட்சிப்படுத்தலை மேற்கொள்ள வேண்டாம் எனவும் யாழ் மேயர் அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.