இந்திய முதலீடு எமது உறவுகளான தமிழருக்கே!

இந்திய முதலீட்டாளர்களால் தெல்லிப்பளையில் அண்மையில் ஆரம்பித்துவைக்கப்பட்ட அலுமினியத் தொழிற்சாலையால் உடனடியாக 50 பெண்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளமுடிந்தது. அந்தத் தொழிற்சாலை மேலும் விரிவாக்கப்பட்டு இன்னும் பல பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என இந்திய துணைத் தூதுவர் ஆ.நடராஜன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்கும் மாநாடு வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், அண்மையில் இந்திய, இலங்கை நிறுவனங்களின் இயக்குநர் தில்லைராஜின் முயற்சியால் இங்கே இந்த அலுமினிய தொழிற்சாலையை நிறுவ முடிந்தது. இத்தொழிற்சாலை தெல்லிப்பளை பிரதேசத்தில் அம்பனை எனும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உடனடியாக 50 பெண்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணம் போரினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாகாணம், எமது இரத்த உறவுகள் அவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் உதவி செய்யவேண்டும். கடந்த வருடம் இந்தியாவிலிருந்து நூறு முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்துக்கு பயணம் செய்திருந்தனர்.

தாம் பயனடைவது அவர்களது நோக்கமல்ல. இங்கிருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டுமென்பதற்கும், இங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவேண்டுமென்பதுமே அவர்களது நோக்கமாக இருந்தது எனவும் தெரிவித்தார்.

Related Posts