தான்தோன்றித்தனமாக கருமமாற்றிய அலுவலகர்கள் சிரமம் அடையத் தொடங்கியுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண முதலமைச்சர் மற்றும் வட மாகாண அமைச்சர்கள், மன்னார் மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் இடம்பெற்ற போது குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
பல பிரச்சினைகள் அண்மைக்காலத்தில் எழுந்துள்ளன. இதுவரைகாலமும் மாகாண சபைகள் இயங்காததால் ஆளுநரும் திணைக்களங்களும் தான் நினைத்தவாறு காரியங்களை ஆற்றி வந்துள்ளனர்.
தற்பொழுது அரசாங்கத்திற்கு மாறுபட்ட கருத்துடைய மாகாண அரசாங்கம் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளதால் முன்னர் தான்தோன்றித்தனமாக கருமமாற்றிய அலுவலகர்கள் சிரமம் அடையத் தொடங்கியுள்ளனர்.
மாகாண சபை உறுப்பினர்களையும் அமைச்சர்களையும் கலந்தாலோசித்து கடமையாற்ற வேண்டும் என்ற விடயம் சம்பந்தமாக சட்டத்திற்கு புறம்பான கருத்துக்களை கொண்டுள்ளார்கள். இது சம்பந்தமாக விரைவில் சட்ட நிபுணர்கள் அனுபவமிக்க அரச அலுவலகர்கள் ஆகியோரை வைத்து கருத்தரங்கம் ஒன்று நடத்த இருக்கின்றோம்.
அப்பொழுது மாகாண சபைகள் நடைமுறையில் இருக்கும் இடங்களில் ஏன் அரச அலுவலகர்கள் தான்தோன்றிதனமாக இயங்க முடியாது என்பது பற்றி அந்த அலுவலகர்கள் அறிந்து கொள்வார்கள் என நம்புகின்றேன்.
இன்றைய கூட்டமானது மன்னார் மாவட்ட அனைத்து கூட்டுறவு சங்கங்களின் அனுசரணையுடனேயே மாவட்ட கூட்டுறவு சபையால் நடத்தப்படுகின்றது. இதில் சாதாரண கூட்டுறவு, மீனவ கூட்டுறவு, பனை தென்னை கூட்டுறவு, சிக்கன சேமிப்பு கூட்டுறவு, கால்நடை கூட்டுறவு ஆகிய கூட்டுறவுகள் ஒழுங்கு சேர்ந்தே இந்த வரவேற்பு கூட்டத்தை நடத்த முன்வந்துள்ளார்கள். அவர்கள் யாவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நீங்கள் எல்லோரும் சேர்ந்து எமக்காக தேர்தலில் வேலை செய்ததால்தான் சிராய்வா, வைத்தியகாலாநிதி குணசீலன் போன்றோர் எமது கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். நீங்கள் அஸ்மினை தேர்ந்தெடுக்காவிட்டாலும் நாங்கள் அவரை தேர்ந்தெடுத்துள்ளோம். எமது எதிர் கட்சியில் இருந்து நீங்கள் ரிப்கான் பதியுதீன், றையிஸ் ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். அவர்கள் யாவரும் உங்களுக்கு நன்றி கடன் பட்டவர்கள்.
இன்றை காலகட்டத்தில் பல பிரச்சினைகள் உங்களிடையே எழுந்துள்ளன. உங்களை எதிர்நோக்கியும் இருக்கின்றன என்பது எனக்கு தெரியாததல்ல உதாரணத்திற்கு இந்திய இலங்கை மீனவர் பிரச்சினை நாட்டின் பிரச்சினையாக மாறியுள்ளது. இதனை இருதரப்பாரும் சேர்ந்து தொடக்கத்திலேயே தீர்த்திருக்கலாம் இப்பொழுது இது பூதகரமாக பெருத்துள்ளது.
நித்தமும் நூற்றுக்கு மேற்பட்ட இந்திய இழுவைப்படகுகள் இந்திய இலங்கை கடல் எல்லையை தாண்டி வந்து எமது கரையோரங்களில் மீன்பிடிக்கின்றனர். சில தடவைகளில் இந்திய படகுகளில் வருவோர் இலங்கை கடற்கரையில் இறங்கி செவ்விளநீர் காய்களைக் கூட வெட்டியெடுத்து செல்கின்றார்கள். ஆனால் எம்மக்கள் அதற்கு எதுவுமே செய்வதில்லை ஏனென்றால் இந்திய மண்ணில் வாழும் எமது அகதிகளுக்கு என்ன நேருமோ என்ற பயம்.
இதைவிட தென் இந்திய மீனவர்கள் தமது இழுவைப்படகுகள் மூலம் எமது கடல் வளங்களை அழித்து வருகின்றார்கள். முன்னர் தமது கடலில் சகலத்தையும் வாரி எடுத்து அழித்து அவர்கள் கடல் நிலத்தை மொட்டையாக்கி விட்டார்கள். தற்பொழுது எமது கடல்பகுதியில் அதையே செய்கின்றார்கள். இதனால் சிறிய மீன்கள் பவளகற்கள் மேலும் வேறுபல கடல் இனங்கள் நாள்தோறும் அழிக்கப்பட்டு வருகின்றது.
அதாவது இழுவைப்படகுக்காரன் சிறிய மீன்களை விற்பனைக்கு பிடிப்பதில்லை பாரிய வலைகளில் இறந்த அவற்றையும் பவளகற்களையும் வாரி எடுத்துக் கொண்டுவர அவற்றை எடுத்து கடலில் வீசிவிட்டு பெரிய இறால்கள் பெரிய மீன்கள் போன்றவற்றை மட்டுமே கரைக்கு எடுத்தச் செல்கின்றனர். எனவே நாள்தோறும் சிறுமீன்கள் பவளகற்கள் ஆகியன அழிந்தொழிந்து வருகின்றன. இவ்வாறே சென்றால் இன்னும் பத்து வருடங்களில் எமது மன்னார் கடல் பிராந்தியம் தென்இந்திய கடல் நிலம் போல் மொட்டைதட்டி போய்விடும். எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவசியமாகின்றது.
இதுபோன்றே உங்கள் ஒவ்வொருவருக்கும் பிரச்சினைகள் நிறைய இருப்பதை நான் அறிவேன். முக்கியமாக அண்மைக்காலங்களில் சில திணைக்களச் செயலாளர்கள் தான்தோன்றித்தனமாக நடக்கத் தொடங்கியுள்ளார்கள். தம் மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர்கள் என்றும் தம்மை மாகாண சபைகள் கட்டுப்படுத்த முடியாதென்றும் கருதுகின்றார்கள். ஆனால் உண்மை அதுவன்று அவர்களின் நியமனம் எவ்வாறு இருப்பினும் அவர்கள் மாகாண சபையின் வழிநடத்தலினுள்ளேயே கடமையாற்றக் கட்டுப்பட்டவர்கள்.
இதை உணர்ந்தால் பல சங்கங்களில் பிரச்சினைகள் தீரும் என நம்பலாம். ஒரு செயலாளரை ஜனாதிபதி நியமிக்கும் போது முதலமைச்சரின் அனுசரனையுடன் நியமிக்கப்பட வேண்டும் என்கின்றது சட்டம். தற்போதைய செயலாளர்கள் மாகாணசபை இல்லாத காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள். அவர்கள் தான் தான்தோன்றித்தனமாக வேலை செய்து இதுவரை காலமும் பழக்கப்பட்டு விட்டார்கள்.
உண்மையில் ஒரு மாகாண சபை தேர்ந்தெடுக்கப்படும் போது சகல செயலாளர்களும் பதவிவிலக வேண்டும். அப்போது தான் ஜனாதிபதி முதலமைச்சரின் அனுசரணையுடன் ஒருவரை அப் பதவிக்கு நியமிக்கலாம். அவ்வாறு பதவி விலகாமல் தொடர்ந்து இப்பேர்பட்ட அரச அலுவலர்கள் மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள்.
மக்கள் அவ்வலுவர்களை நியமித்த கட்சியை நிராகரித்தபின் அல்லது தாம் ஜனாதிபதிக்கோ மத்திய அரசாங்கத்திற்கோ விஸ்வாசமுடையவர்களாக தொடர்ந்து இருக்கப் போகிறார்கள் என்றால் அது துரோகம் அல்லாமல் வேறு என்னவாகும்?
எனது பிரதேச சபைகளும் கூட்டுறவுச் சபைகளும் ஏன் மாகாண சபைகளும் கூட இன்று இப்படிப்பட்ட இக்கட்டான ஒரு நிலையையே சந்தித்து வருகின்றார்கள். வெகுவிரைவில் இதற்கு முற்றுப்புள்ளி போடமுடியும் என நம்புகின்றேன். தமிழ் பேசும் மக்கள் தமக்கென ஒரு மாகாணசபை உருவாக்கப்பட்டுள்ளது.
என்பதை கவனத்திற்கு எடுக்கவேண்டும். எமது மாகாண சபையை கூட்டுறவு சங்கங்களை பிரதேச சபைகளை எம்மால் ஒழுங்காக நிர்வகிக்க முடியாதென்றால் அது தழிழ் பேசும் மக்கள் மீது ஆறாப்பழியை ஏற்படுத்திவிடும். அதற்கு நாம் இடங்கொடுக்க இயலாது. பல தருணங்களில் விட்டுக்கொடுத்தலானது பல பிரச்சினைகளை தீர்க்கின்றது. நான் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும். மற்றையவர்கள் விட்டுக்கொடுக்கட்டும் என்ற மனோபாவம் எம்மை பிரச்சினைகளில் இருந்து விடுபடாமல் இருக்கச் செய்து விடும்.
நான் மல்லாகம் மாவட்ட நீதிபதியாக இருந்தபோது ஒரு தாய்க்கும் மகனுக்குமிடையில் ஒரு காணி வழக்கொன்று பதியப்பட்டது. சுமார் ஆறு அங்குல அகலமும் ஐம்பது அடி நீளமும் கொண்ட ஒரு நீளமான துண்டு காணியே பிரச்சினை. நான் அந்த தாயிடம் கேட்டேன் ஏன் அம்மா மூன்று அங்குலம் நீங்கள் எடுத்து மீதி மூன்று அங்குலத்தை மகனுக்கு விட்டுக்கொடுத்தால் என்ன அப்படி செய்தால் இன்றே பிரச்சினையை தீர்த்து வைக்கின்றேன் என்று கூறினேன்.
அந்த அம்மையார் முடியாது என்று விட்டார். நான் அடுத்த கிழமை கொழுப்பிற்கு மாற்றலாகிச் செல்ல வேண்டியிருந்தது. வழக்கை விளக்கத்திற்கு நியமித்து விட்டு சென்று விட்டேன். நான் மாற்றலாகி போவதை அறிந்த அந்த அம்மா மல்லாகத்தில் என் கடைசி நாளன்று வழக்கை கூப்பிட கோரினாள்.
பல வழக்குகள் அன்று கூப்பிடப்பட்டதால் என்னால் அன்று எதுவும் செய்ய முடியவில்லை. குறுகிய தவணை கொடுத்து விட்டு மாற்றலாகி வந்துவிட்டேன். நான் மல்லாகத்தைவிட்டு வந்ததும் மல்லாக மாவட்ட நீதிமன்றம் தீக்கிரையாக்கப்பட்டது. அந்த அம்மாவின் வழக்கேடும் எரிந்து விட்டது.
வழக்கில் விட்டுக் கொடுங்கள் என்று கேட்ட பொழுது அதற்கு செவிசாய்த்திருந்தால் அன்றே வழக்கு தீர்கப்பட்டு அத்தாட்சி படுத்தப்பட்ட தீர்ப்பு கொப்பியும் பெற்றிருக்கலாம். ஆனால் ஒரு தாய் மகனுக்கெதிராக வழக்கு பதிந்து விட்டுக்கொடுக்கவும் முன்வரவில்லை. விட்டுக்கொடுத்திருந்தால் இருவருக்கும் நன்மை பயத்திருக்கும்.
இப்பேர்பட்ட விட்டுக்கொடுப்பே எமது மக்களின் நலன்களை பாதுகாக்கவல்லது. இன்று என்னை அழைத்து இக்கூட்டத்தில் பங்குபற்ற அழைத்தமைக்கு நன்றி´ என சிவி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.