இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களைத் தடுப்பதற்குப் பதிலாக அவர்களைச் சுடுவதற்கு கடற்படையினருக்கு அனுமதி கொடுப்பதே ஒரே வழியென மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
ஆனால் அதற்கான அனுமதியை வழங்கும் சட்டமூலத்தை சிறீலங்கா அரசாங்கம் அமுல்படுத்தாது என்ற நிலையிலேயே இந்திய மீனவர்களின் அத்துமீறல் கைமீறிப் போகின்றதெனத் தெரிவித்துள்ளார்.
நேற்று(வியாழக்கிழமை) வடமாகாண மீனவர் சங்கத் தலைவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
இந்திய மீனவர்களைக் கைது செய்வதிலும் பார்க்க அவர்களைச் சுடுவதே கடற்படையினருக்கு இலகுவான வழி. இந்திய மீனவர்களை விரட்டுவதற்கு மாத்திரம் கடற்படை மாதம் ஒன்றுக்கு 200 மில்லியன் எரிபொருளைச் செலவு செய்கின்றது.
அத்துடன், துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் நோக்கம் சிறீலங்கா அரசாங்கத்துக்கு இல்லை. சுமுகமான முறையில் பேசித்தீர்க்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், வெளிநாட்டு மீனவர்களைக் கைது செய்வது தொடர்பாக சட்டமூலத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன்படி தண்டப் பணத்தை அறவிடல், படகுகளைப் பறிமுதல் செய்தல், கைதான மீனவர்களை விடுவிக்க படகு உரிமையாளர்கள் நேரே வருதல் போன்ற பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.