இந்திய-பாகிஸ்தான் கடல் பகுதியில் பாக் மீன்பிடிப் படகு வெடித்துச் சிதறியது

பாகிஸ்தானில் இருந்து வந்த ஒரு மீன்பிடிப் படகை இந்தியக் கடலோரக் காவல்படையினர் மடக்கிப் பிடிக்க முயன்றதை அடுத்து, அப்படகு கடலில் வெடித்துச் சிதறியது என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.

india_pak_fishingboat

அந்தப் படகில் பயணித்தவர்கள் படகுக்கு தீ மூட்டினர் என்றும் அதன் காரணமாக படகு வெடித்தது என்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்த மீன்பிடிப் படகில் காணப்பட்ட நால்வரும் உயிரிழந்துள்ளதாக கருதப்படுகிறது.
அவர்கள் தப்பிப்பதற்காக படகின் வேகத்தை அதிகப்படுத்தியபோது, அதை தடுத்து நிறுத்த தாங்கள் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் இந்தியக் கடலோரக் காவல்படையினர் கூறுகிறது.

உளவுப்பிரிவு அளித்த தகவலை அடுத்து கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி நள்ளிரவில் இந்திய-பாகிஸ்தான் சர்வதேசக் கடல் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடியதை அடுத்தே அந்தப் படகை தொடரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்று இந்திய அரச தரப்பு கூறுகிறது.

அரபிக் கடல் பகுதியில் கராச்சியிலிருந்து வந்த மீன்பிடிப் படகொன்று சட்டவிரோதமான வகையில் சில பரிமாற்றங்களைச் செய்யவுள்ளதக தகவல் கிடைத்ததை அடுத்து ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, பாதுகாப்புப் படையினர் விமான உதவியுடன் அந்தப் படகை அடையாளம் காணும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்தியக் கடலோரக் காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.

பின்னர் 31ஆம் தேதி நள்ளிரவில் குஜராத் மாநிலம் போர்பந்தர் நகருக்கு மேற்கு-வடமேற்கே சுமார் 365 கிலோ மீட்டர் தொலைவில் மேலதிக விசாரணைகளுக்காக படகை நிறுத்துமாறு எச்சரித்ததாக கூறும் கடலோரக் காவல்படையினர், அதற்கு செவிமடுக்காமல் அப்படகு தனது வேகத்தை அதிகரித்து, இந்தியக் கடல் எல்லையிலிருந்து தப்பித்துச் செல்ல முயன்றது எனக் கூறியுள்ளனர்.

பின்னர் அந்தப் படகு ஒரு மணி நேரத்துக்கு தொடரப்பட்டது, எச்சரிக்கை செய்யும் வகையில் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டு அந்தப் படகை தாங்கள் தடுத்து நிறுத்தியதாக இந்தியக் கடலோரக் காவல்படையின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

ஆனால் அந்தப் படகில் இருந்த நால்வரும் அனைத்து எச்சரிக்கைகளையும் புறந்தள்ளி, விசாரணைகளுடன் ஒத்துழைக்க மறுத்துவிட்டனர் எனக் கூறும் அந்தச் செய்திக் குறிப்பு, பின்னர் அவர்கள் படகின் கீழ்தளத்துக்குச் சென்று அதற்கு தீ மூட்டினர் என்றும், அதன் காரணமாக படகு வெடித்துச் சிதறி தீப்பற்றிக் கொண்டது எனறும் கூறுகிறது.

கும்மிருட்டு, மோசமான வானிலை, கடும் காற்று ஆகியவை காரணமாக அந்தப் படகில் இருந்தவர்களை காப்பாற்றவோ, மீட்கவோ முடியவில்லை என்றும், நேற்று ஜனவரி மாதம் முதல் தேதி அதிகாலை அந்தப் படகு எரிந்து கடலில் மூழ்கியது என்றும் இந்தியக் கடலோரக் காவல்படையினரின் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

இச்சமப்வத்தில் யாரெனும் உயிர் பிழைத்துள்ளனரா என்பதை கண்டறியும் வகையில் அந்தக் கடல் பகுதியில் கடலோரக் காவல்படையினரின் கப்பல்களும் விமானங்களும் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன எனவும் அந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தியக் கடற்பிராந்தியம் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே மேம்பட்ட அளவில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இந்தியக் கடலோரக் காவல்படையினர் கூறுகிறார்கள்.

Related Posts