இந்திய, இலங்கை மீனவர்கள் இருநாட்டுக்கும் இடையேயான கடற்பரப்பில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து நேற்று நடந்த அதிகாரிகள் மட்டத்திலான கூட்டத்தில் உறுதியான முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை.
மீன்வளத்துறை மற்றும் மீனவர்கள் விவகாரம் தொடர்பான இந்திய-இலங்கை கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை புதுடில்லியில் நடைபெற்றது.
இந்திய-இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஏற்கனவே டில்லியில் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, மீனவர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மீன்பிடி உரிமைகள் உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.
இருநாட்டுக்கும் இடையே அறிவியல் அமைப்புகள் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும், அதன்மூலம் ஆராய்ச்சிகளையும் வளர்ச்சித்திட்டங்களையும் முன்னெடுத்து மீனவர்கள் சுயமாக தொழிலை முன்னெடுக்க உதவுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் இருதரப்பும் உடன்பட்டுள்ளன.
இந்தக் கூட்டத்தில் இந்தியத் தரப்பில் மத்திய கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறையின் துணைச் செயலாளர் ராஜசேகர் தலைமையில் மத்திய மற்றும் தமிழக உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இலங்கைத் தரப்பில் மீன்வளத்துறையின் தலைமை நிர்வாகி நிமல் ஹெட்டியாரச்சி தலைமையில் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
மீனவர்கள் யாரும் மற்ற நாட்டுச் சிறைகளில் இல்லை, அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டனர் என்று இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அடுத்தக் கூட்டம் கொழும்பில் நடைபெறும் என்றும் அதற்கான தேதியை இரண்டு தரப்பினரும் கலந்தாலோசித்து தீர்மானிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எல்லா மீன்பிடி படகுகளையும் பதிவு செய்தல், ஆய்வு மேற்கொள்ளுதல் மற்றும் சான்றிதழ் அளித்தல் உள்ளிட்ட அதிகாரங்களை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளதாக மத்திய கப்பல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
முன்னர், 20 மீட்டரை விட நீளமான படகுகளுக்கு இந்தப் பணிகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கவில்லை.
தற்போது, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பதிய அதிகாரத்தின் மூலம், அனைத்து மீனவர்களும் எல்லா வகையான படகுகளையும் எளிதாகவும் விரைவாகவும் பதிவு செய்துகொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.