இந்திய அணி வெற்றி தொடரையும் கைப்பற்றியது

ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

he India T20 squad

இந்தியா – ஜிம்பாப்வே இடையிலான 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹராரே நகரில் நேற்று நடந்தது. தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் வகையில் அமைந்த இந்த போட்டியில் ‘டாஸ்’ ஜெயித்த ஜிம்பாப்வே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி இந்த பயணத்தில் இந்திய அணி முதல் முறையாக முதலில் பேட்டிங் செய்தது. ஆனால் கடினமான ஆடுகளம் மற்றும் ஜிம்பாப்வேயின் ஆக்ரோஷமான பந்து வீச்சை சமாளித்து இந்திய வீரர்களால் சுலபமாக ரன் எடுக்க முடியவில்லை. முந்தைய ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை தேடித்தந்த மன்தீப் சிங் 4 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 22 ரன்னிலும் வீழ்த்தப்பட்டனர். மனிஷ் பாண்டே (0) ரன்–அவுட் ஆனதால் இந்தியாவுக்கு நெருக்கடி உருவானது. முதல் 10 ஓவர்களில் இந்தியா 3 விக்கெட்டுக்கு 53 ரன்களே எடுத்திருந்தது.
ஜாதவ் அரைசதம்

ஊசலாட்டத்துக்கு மத்தியில் கேதர் ஜாதவ் மட்டும் நிலைத்து நின்று விளையாடி அணியின் மானத்தை காப்பாற்றினார். மறுமுனையில் அம்பத்தி ராயுடு 20 ரன்னிலும், சொதப்பிய கேப்டன் டோனி 9 ரன்னிலும் (13 பந்து, ஒரு பவுண்டரி) வெளியேறினர். துரிதமாக ரன் சேகரித்து அணி சவாலான ஸ்கோரை எட்ட உதவிய கேதர் ஜாதவ் 58 ரன்கள் (42 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசிய நிலையில் கேட்ச் ஆனார். 20 ஓவர்களில் இந்தியா 6 விக்கெட்டுக்கு 138 ரன்கள் சேர்த்தது. கடைசி 3 ஓவர்களில் மட்டும் இந்தியா 43 ரன்களை திரட்டியது. அக்ஷர் பட்டேல் 20 ரன்களுடன் (11 பந்து, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார்.

பின்னர் 139 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய ஜிம்பாப்வேக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கிடுக்குபிடி போட்டனர். சீரான இடைவெளியில் ஜிம்பாப்வேயின் விக்கெட் சரிய, இந்தியாவின் கை படிப்படியாக ஓங்கியது. கடைசி ஓவரில் ஜிம்பாப்வேயின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் இந்தியா எளிதில் வெற்றி கண்டு விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதி ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் பரிந்தர் ஸ்ரன் கொஞ்சம் இதயதுடிப்பை எகிற வைத்து, இறுதியில் சுபம் போட்டார்.

20–வது ஓவரில் அவர் வீசிய முதல் பந்தை மருமா சிக்சருக்கு விரட்டினார். 2–வது பந்து வைடாக, மீண்டும் வீசப்பட்ட 2–வது பந்து ‘நோ–பால்’ ஆனது. அதில் பந்து பவுண்டரிக்கு ஓடியது. ஒரு பந்து மட்டுமே வீசப்பட்ட நிலையில் பரிந்தர் ஸ்ரன் 12 ரன்களை விட்டுக்கொடுத்ததால் பரபரப்பு தொற்றிக் கொண்டது. எஞ்சிய 5 பந்தில் 9 ரன் தேவைப்பட்டது.

இதையடுத்து ‘பிரிஹிட்’டாக மறுபடியும் வீசப்பட்ட 2–வது பந்தில் ரன் எடுக்கப்படவில்லை. 3–வது பந்திலும் ரன் இல்லை. 4–வது பந்தில் ஒரு ரன் வந்தது. ஸ்டம்பை குறி வைத்து வீசினால் எதிராளிகள் தூக்கியடித்து விடக்கூடும் என்று கருதி பரிந்தர் ஸ்ரன் பந்தை ஆப்–சைடுக்கு வெளியே தொடர்ந்து வீசினார். 5–வது பந்தை சந்தித்த சிகும்புரா பவுண்டரி அடித்தார். இதனால் கடைசி பந்தில் ஜிம்பாப்வேயின் வெற்றிக்கு 4 ரன் தேவைப்பட்டது. இந்த பந்தை ஆப்–சைடுக்கு வெளியே புல்டாசாக பரிந்தர் ஸ்ரன் வீச, அதை சற்று தூக்கியடித்த சிகும்புரா (16 ரன்) ‘கவர்’ திசையில் நின்ற யுஸ்வேந்திர சாஹலிடம் சிக்கினார். 20 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட்டுக்கு 135 ரன்களே எடுத்தது. இதன் மூலம் இந்தியா 3 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை ருசித்தது.

இந்த வெற்றியை அடுத்து இந்தியா 20 ஓவர் தொடரை 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது ஆட்டத்தில் 2 ரன் வித்தியாத்தில் ஜிம்பாப்வேயும், 2–வது ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றிருந்தன. கேதர் ஜாதவ் ஆட்டநாயகன் விருதையும், தொடரில் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகள் வீழ்த்திய பரிந்தர் ஸ்ரன் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர். முன்னதாக ஒரு நாள் தொடரை இந்தியா 3–0 என்ற கணக்கில் வென்றது நினைவிருக்கலாம்.

இந்திய அணி அடுத்து ஜூலை–ஆகஸ்டு மாதங்களில் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் 4 டெஸ்ட் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

Related Posts