Ad Widget

இந்திய அணி ‘திரில்’ வெற்றி

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் வங்காளதேசத்துக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது.

6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது சூப்பர்-10 சுற்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் குரூப்1, குரூப்2 என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. சூப்பர்-10 சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் குரூப்2-ல், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த ‘நாக்-அவுட்’ போன்ற முக்கியமான லீக் ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேச அணிகள் கோதாவில் இறங்கின. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. உடல்நலக்குறைவால் கடந்த ஆட்டத்தில் ஆடாத தமிம் இக்பால் வங்காளதேச அணிக்கு திரும்பினார்.

‘டாஸ்’ ஜெயித்த வங்காளதேச கேப்டன் முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தார். இதன்படி ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆட வந்தனர். ‘முந்தைய ஆட்டங்களில் ஜொலிக்காததால் கொஞ்சம் நேரமாவது நிலைத்து நின்று ஆட வேண்டும்’ என்பது போல் இருவரின் பேட்டிங்கும் அமைந்தது. இதுவே தடுமாற்றத்திற்கும் வழிவகுத்தது. வங்காளதேச வீரர்கள் நுணுக்கமாக பந்து வீசியதுடன், பீல்டிங்கிலும் வியக்க வைத்தனர். பேட்டிங்குக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் முதல் 5 ஓவர்களில் இந்தியா 27 ரன்களே எடுத்திருந்தது.

வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூரின் 6-வது ஓவரில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் தலா ஒரு சிக்சர் அடித்த போது தான் ரசிகர்களுக்கு ஆனந்தம் பிறந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சிக்கு ஆயுசு குறைவு. அந்த ஓவரில் ரோகித் சர்மா (18 ரன், 16 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆக, அடுத்த ஓவரில் ஷிகர் தவானும் (23 ரன், 22 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) மூட்டையை கட்டினார்.

இதையடுத்து துணை கேப்டன் விராட் கோலியும், சுரேஷ் ரெய்னாவும் கைகோர்த்தனர். கோலி ஒன்று, இரண்டு ரன்கள் வீதம் எடுக்க, ரெய்னா முடிந்தவரை அதிரடி காட்டினார். ஆனால் ரன்வேட்டையை தீவிரப்படுத்திய சமயத்தில் துரதிர்ஷ்டவசமாக இந்த ஜோடி பிரிந்தது. விராட் கோலி 24 ரன்களில் ( 24 பந்து, ஒரு சிக்சர்) முட்டிப்போட்டு விளாச முயற்சித்த போது கிளீன் போல்டு ஆனார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா தடாலடியாக பந்தை சிக்சர், பவுண்டரிக்கு விரட்டி சற்று ரன்ரேட்டை உயர்த்தினார். ஆனால் அவரது பேட்டும் அதிக நேரம் மைதானத்தில் மையம் கொள்ளவில்லை.

அணியின் ஸ்கோர் 112 ரன்களாக உயர்ந்த போது, ரெய்னா 30 ரன்களில் (23 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தார். அடுத்த பந்தை பாண்ட்யா (15 ரன், 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) தூக்கியடித்த போது சவும்யா சர்கார் பாய்ந்து விழுந்து சூப்பராக கேட்ச் செய்தார். யுவராஜ்சிங்கும் (3 ரன், 6 பந்து) சொதப்பினார்.

ஸ்கோர் 160 ரன்களை கடக்கலாம் என்று கணிக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து விக்கெட் வீழ்ச்சியால் இந்தியாவின் ஸ்கோர் கடைசியில் ‘சப்பின்றி’ போய் விட்டது. கேப்டன் டோனியாலும் பந்தை ஆகாய மார்க்கமாக விளாச முடியவில்லை.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. டோனி 13 ரன்களுடன் (12 பந்து, ஒரு பவுண்டரி) களத்தில் இருந்தார்.

அடுத்து 147 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய வங்காளதேசத்துக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தன. இருப்பினும் தேவையான நேரத்தில் அவர்கள் பந்தை எல்லைக்கோட்டுக்கு விரட்டவும் தவறவில்லை. தமிம் இக்பால் 35 ரன்களும் (32 பந்து, 5 பவுண்டரி), சபிர் ரகுமான் 26 ரன்களும் (15 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஷகிப் அல்-ஹசன் 22 ரன்களும் (15 பந்து, 2 சிக்சர்), சவும்யா சர்கார் 21 ரன்களும் எடுத்து கணிசமான பங்களிப்பை அளிக்க, ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

கடைசி 2 ஓவர்களில் வங்காளதேசத்தின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டன. 19-வது ஓவரை வீசிய பும்ரா 6 ரன்கள் விட்டுக்கொடுத்தார். கடைசி ஓவரில் வங்காளதேசத்தின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டன. களத்தில் உச்சக்கட்ட டென்ஷன் நிலவியது. கைவசம் 4 விக்கெட் இருந்தது. திரிலிங்கான கட்டத்தில் 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்ட்யா வீசினார். முதல் பந்தில் மக்முதுல்லா ஒரு ரன் எடுத்தார். 2-வது மற்றும் 3-வது பந்தை முஷ்பிகுர் ரம் பவுண்டரிக்கு விளாச, மைதானம் ஒரு கணம் நிசப்தமானது. 4-வது பந்தில் முஷிபிகுர் ரம் (11 ரன்) கேட்ச் ஆனார். இதையடுத்து 2 பந்தில் 2 ரன் தேவைப்பட்டது. 5-வது பந்தை எதிர்கொண்ட மக்முதுல்லா (18 ரன்) தூக்கியடித்த போது, அதை ரவீந்திர ஜடேஜா பிரமாதமாக கேட்ச் செய்தார். அடுத்து ஒரு பந்தில் 2 ரன் எடுக்க வேண்டும். முடிவு என்னவாகுமோ? என்ற பரிதவிப்பில், ரசிகர்களின் சீட்டின் நுனிக்கே வந்துவிட்டனர். இதய துடிப்பு எகிறிப் போனது என்றே சொல்ல வேண்டும்.

அப்படிப்பட்ட நிலைமையில் கேப்டன், சக வீரர்களின் ஆலோசனைக்கு பிறகு ஹர்திக் பாண்ட்யா கடைசி பந்தை மிகுந்த நம்பிக்கையுடன் சற்று வெளியே வீசினார். அதை வங்காளதேச வீரர் அடிக்க முடியாமல் பந்து விக்கெட் கீப்பர் டோனியின் கைக்கு சென்றது. அதற்குள் அவர்கள் ஒரு ரன் ஓட முயற்சித்தனர். ஆனால் விக்கெட் கீப்பர் டோனி, கச்சிதமாக செயல்பட்டு முஸ்தாபிஜூர் ரகுமானை ரன்-அவுட் ஆக்கி, ரசிகர்களின் வயிற்றில் பாலை வார்த்தார்.

வங்காளதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 145 ரன்களுக்கு அடங்கியது. இதனால் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. இந்திய தரப்பில் அஸ்வின், ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அஸ்வின் ஆட்டநாயகன் விருதை பெற்றார். 3-வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணிக்கு இது 2-வது வெற்றியாகும். இதன் மூலம் அரைஇறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்ட இந்தியா தனது கடைசி லீக்கில் வருகிற 27-ந்தேதி ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. 3-வது தோல்வியை சந்தித்த வங்காளதேசம் போட்டியை விட்டு வெளியேறியது.

இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்களின் பீல்டிங் படுமோசமாக இருந்தது. தமிம் இக்பால் 15 ரன்களில் இருந்த போது கொடுத்த சுலப கேட்ச் வாய்ப்பை பும்ரா கோட்டை விட்டார். அதன் பிறகு தமிம் இக்பால் மேற்கொண்டு 20 ரன்கள் எடுத்து விட்டார். இதே போல் ஷகிப் அல்-ஹசன் 8 ரன்களில் இருந்த போது வழங்கிய கேட்ச்சை, அஸ்வின் நழுவ விட்டார். அதன் பிறகு அவர் மேலும் 14 ரன்கள் சேர்த்தார். இந்த கேட்சுகளை மட்டும் இந்திய வீரர்கள் பிடித்திருந்தால் இந்த அளவுக்கு ஆட்டத்தில் பதற்றமும், பரபரப்பும் எகிறியிருக்காது.

Related Posts