4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அஸ்வின் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
தில்லியில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 117.5 ஓவர்களில் 334 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அஜிங்க்ய ரஹானே 127 ரன்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் கைல் அபாட் 5 விக்கெட்டுகளையும், டேன் பீயெட் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்கா 49.3 ஓவர்களில் 121 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 42 ரன்கள் எடுத்தார். இந்தியத் தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 213 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸை 100.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
481 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா, வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்ததால் போட்டியை டிரா செய்யும் நோக்கில் ஆரம்பம் முதலே தடுப்பாட்டத்தில் இறங்கியது. 4-வது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 72 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது. ஆம்லா 23, டிவில்லியர்ஸ் 11 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
கடைசி நாளான இன்றும் தடுப்பாட்ட உத்தியுடன் ஆடினார்கள் தென் ஆப்பிரிக்க வீரர்கள். 244 பந்துகளில் 25 ரன்களை மட்டுமே எடுத்த ஆம்லாவின் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். அதற்குப் பிறகு வந்த டுப்பிளெஸ்ஸியும் தடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்தினார். டிவில்லியர்ஸ் 33-வது பந்திலும் ஆம்லா 46-வது பந்திலும் முதல் ரன்னை எடுத்தார்கள். இவர்களுக்குச் சமமாக டுப்பிளெஸ்ஸியும் 53-வது பந்தில்தான் முதல் ரன்னை எடுத்தார்.
உணவு இடைவேளையின்போது, தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்தது.
அதன்பிறகு, டுபிளெஸ்ஸியின் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். அவர் 97 பந்துகளைச் சந்தித்து 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். பிறகு ஆடவந்த டுமினி ரன் எதுவும் எடுக்காமல் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
தேநீர் இடைவேளையின்போது, தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. ஆட்டத்தின் கடைசிப் பகுதியில் இந்திய அணி வெற்றி பெற 5 விக்கெட் தேவைப்பட்டது. தென் ஆப்பிரிக்காவின் தடுப்பாட்டத்தையும் மீறி இந்திய பவுலர்கள் மிக அற்புதமாக பந்துவீசி, கடைசிப் பகுதியில் ஆட்டத்தின் போக்கை மாற்றினார்கள்.
விலாஸின் விக்கெட்டை உமேஷ் யாதவ் கைப்பற்றினார். விலாஸ் 13 ரன்கள் எடுத்தார். இந்தச் சமயத்தில் யாதவ்-வின் பந்துவீச்சு ஆக்ரோஷமாக இருந்தது.
இந்திய அணியின் வெற்றியைத் தடுப்பதில் பெரிய தடையாக இருந்த டிவில்லியர்ஸின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். டிவில்லியர்ஸ் 297 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக, இது யாதவா இல்லை வக்கார் யூனூஸா என்று வியக்கும் வண்ணம் அற்புதமான பந்தில் அபாட்டை க்ளீன் போல்ட் செய்தார் உமேஷ் யாதவ். பிறகு பீயெட்டின் விக்கெட்டையும் யாதவ் வீழ்த்தினார். கடைசியாக, மார்கலின் விக்கெட்டை வீழ்த்தி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார் அஸ்வின். இந்த இன்னிங்ஸில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணி 143 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. டெஸ்ட் தொடரை 3-0 என வென்றுள்ளது.
ஆட்ட நாயகன் விருதை ரஹானே பெற்றார். அவர் இந்த விருதை கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு அர்ப்பணிப்பு செய்தார். தொடர் நாயகன் விருதை அஸ்வின் பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது இந்திய அணி.