இந்திய அணி அபார வெற்றி!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 208 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது.

இவ்விரு அணிகள் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹைதராபாதில் நடைபெற்றது. இதில், முதலில் பேட் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 166 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 687 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இந்திய அணியில் கேப்டன் கோலி 204, முரளி விஜய் 108, ரித்திமான் சாஹா ஆட்டமிழக்காமல் 106 ரன்கள் குவித்தனர். வங்கதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளையும், மெஹதி ஹசன் மிராஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி 127.5 ஓவர்களில் 388 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முஷ்பிகுர் ரஹிம், 235 பந்துகளில் சதமடித்தார். இது டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 5-ஆவது சதமாகும். கடைசி விக்கெட்டாக முஷ்பிகுர் ரஹிம் ஆட்டமிழந்தார். அவர் 262 பந்துகளில் 2 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 127 ரன்கள் குவித்தார். இந்தியத் தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 299 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, வங்கதேசத்துக்கு “பாலோ-ஆன்’ கொடுக்காமல் 2-ஆவது இன்னிங்ஸை ஆடியது. இந்தியா 29 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தார் கேப்டன் கோலி.

இதையடுத்து 459 ரன்கள் வெற்றி இலக்குடன் பேட் செய்த வங்கதேச அணி, 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 35 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. மகமதுல்லா 9, ஷகிப் அல்ஹசன் 21 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இன்று ஆட்டத்தின் முதல் பகுதியில் அந்த அணி இரு விக்கெட்டுகளை இழந்தது. ஷகிப் அல்ஹசன் விக்கெட்டை ஜடேஜாவும் முஷ்பிகுர் ரஹிம் விக்கெட்டை அஸ்வினும் வீழ்த்தினார்கள். 5-ம் நாள் உணவு இடைவேளையின்போது வங்கதேச அணி 67 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது.

உணவு இடைவேளைக்குப் பிறகு இந்திய அணியின் பந்துவீச்சு மேலும் துல்லியமாக இருந்தது. சபிர் ரஹ்மான், மஹ்முதுல்லாவின் விக்கெட்டுகளை வீழ்த்தினார் இஷாந்த் சர்மா. மஹ்முதுல்லா சிறப்பாக விளையாடி 64 ரன்கள் எடுத்தார்.

இதற்கடுத்த 3 விக்கெட்டுகளையும் அஸ்வின், ஜடேஜா வீழ்த்தினார்கள். இதனால் வங்கதேச அணி 100.3 ஓவர்களில் 250 ரன்களுக்கு ஆட்டமிழந்து 208 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தியத் தரப்பில் ஜடேஜா, அஸ்வின் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இதையடுத்து ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட டெஸ்ட் தொடரையும் கோலி தலைமையிலான இந்திய அணி வென்றுள்ளது.

இரட்டைச் சதமெடுத்த விராட் கோலிக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்துள்ளது.

Related Posts