இந்தியா 75 ரன் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் பெங்களூருவில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் நாதன் லயனின் சுழலில் சிக்கி 189 ரன்னில் சுருண்டது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 276 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் ஜடேஜா 6 விக்கெட்டுக்கள் அள்ளினார். 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி புஜாரா (92), ரகானே (52), லோகேஷ் ராகுல் (51) ஆகியோரின் பேட்டிங்கால் 274 ரன்கள் எடுத்தது.

2-வது இன்னிங்ஸ் முடிவில் இந்தியா 187 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 188 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா.

188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணியின் வார்னர், ரென்ஷா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரென்ஷா 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அவர், இசாந்த் சர்மா பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து கேப்டன் ஸ்மித் களம் இறங்கினார். வார்னர் 17 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் வெளியேறினார். ஸ்மித் 28 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டம் இழந்தார். அதன்பின் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. ஷேன் மார்ஷை 9 ரன்னில் உமேஷ் யாதவ் எல்.பி.டபிள்யூ மூலம் வெளியேற்றினார்.

அதன்பின் வந்தவர்களை அஸ்வின் வரிசையாக வெளியேற்ற, ஆஸ்திரேலியா 112 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அஸ்வின் 12.4 ஓவர்கள் வீசி 41 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் அள்ளினார். உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், இசாந்த் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-1 என சமநிலைப் படுத்தியுள்ளது. இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் அடித்த லோகேஷ் ராகுல் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

3-வது போட்டி ராஞ்சியில் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது.

Related Posts