இந்தியா 246 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

255340-3

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 129.4 ஓவர்களில் 455 ரன்கள் குவித்தது. கேப்டன் கோலி 167, புஜாரா 119, அஸ்வின் 58 ரன்கள் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், மொயீன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைச் சாய்த்தனர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 102.5 ஓவர்களில் 255 ரன்களுக்கு சுருண்டது. பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுத்தார். இந்தியத் தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 200 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 63.1 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து 405 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, வெற்றி பெறுவதற்கு சாத்தியமில்லை என்பதால் ஆரம்பத்திலேயே போட்டியை டிரா செய்யும் முயற்சியில் இறங்கியது.

405 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி கேப்டன் குக் – ஹஸீப் ஹமீது ஜோடியின் தடுப்பாட்டத்தால் சரிவிலிருந்து தப்பியது. இந்த ஜோடி 50.2 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணி 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 59.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்தது.ஜோ ரூட் 23 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு கடைசி நாளான இன்று 318 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் கைவசம் 8 விக்கெட்டுகள் மட்டுமே இருந்ததால் அந்த அணியின் தோல்வி ஏறக்குறைய உறுதியான நிலையில் இன்றைய ஆட்டம் தொடர்ந்தது.

அஸ்வின் பந்துவீச்சை எதிர்கொள்ள மிகவும் சிரமப்படும் டக்கெட், இந்தமுறையும் அஸ்வின் பந்துவீச்சில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பிறகு மொயீன் அலியை 2 ரன்களில் வீழ்த்தினார் ஜடேஜா. இந்திய அணிக்குச் சவாலாக விளங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்டோக்ஸ் 6 ரன்களில் புதுமுகம் ஜெயந்த் யாதவ் பந்துவீச்சில் க்ளீன் போல்ட் ஆனார். இன்றைய தினம், மற்ற வீரர்களை விடவும் உறுதியுடன் ஆடிவந்த ரூட், 25 ரன்களில் ஷமியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடகடவென விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்த நேரத்தில் உணவு இடைவேளைக்கு முன்பு ரஷித்தின் விக்கெட்டை வீழ்த்தினார் ஷமி.

உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 93 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்து தடுமாறியது.

இதன்பிறகு வந்தவேகத்தில் பெவிலியன் திரும்பினார்கள் இங்கிலாந்து வீரர்கள். உணவு இடைவேளைக்குப் பிறகு அஸ்வின் வீசிய முதல் ஓவரிலேயே அன்சாரியின் விக்கெட்டை வீழ்த்தினார். சில ஓவர்கள் கழித்து ஒரே ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் பிராட், ஆண்டர்சனின் விக்கெட்டுகளை எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்தினார் ஜெயந்த். இதனால் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்ஸில் 97.3 ஓவர்களில் 158 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 246 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியத் தரப்பில் அஸ்வின், ஜெயந்த் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

ஆட்டத்தின் சிறப்பாட்டக்காரராக கேப்டன் கோலி தெரிவுசெய்யப்பட்டார்

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

Related Posts