இந்தியா 10 விக்கெட்டுகளால் இலகு வெற்றி

ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது இருபது 20 போட்டியில் பத்து விக்கெட்டுகளால் வெற்றி இந்திய அணி, முதல் போட்டியில் தழுவிய அதிர்ச்சி தோல்விக்கு பதிலடி கொடுத்தது.

245677

ஜிம்பாப்வேயில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகளை கொண்ட இருபது 20 தொடரில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முதலாவது இருபது 20 போட்டியில், ஜிம்பாப்வே அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2ஆவது இருபது 20 போட்டி ஹராரேவில் நேற்று நடைபெற்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

கடந்த போட்டியை போன்று இல்லாமல் ஆரம்பம் முதலே கவனத்துடன் இந்திய பந்து வீச்சாளர்கள் செயல்பட்டனர். இதனால், ஜிம்பாப்வே அணி வீரர்களால் கடந்த ஆட்டத்தை போல வேகமாக ஓட்டங்களை குவிக்க முடியவில்லை.

விக்கெட்டுகளும் சீரான இடைவெளியில் விழுந்ததால், ஜிம்பாப்வே அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 99 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதன் மூலம் 100 ஓட்டங்கள் என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, விக்கெட் இழப்பின்றி 13.1 ஓவர்களில் 103 ஓட்டங்களை பெற்று 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது.

இந்திய அணியில் தொடக்க வீரர்கள் மந்தீப் சிங் 52 ஓட்டங்களையும் லோகேஷ் ராகுல் 47 ஓட்டங்களையும் பெற்று களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் இந்திய அணி சமநிலைப்படுத்தியுள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3 ஆவது இருபது 20 போட்டி நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளது.

Related Posts