இந்தியா த்ரில் வெற்றி

இந்தியா – அவுஸ்திரேலியா இடையே சிட்னியில் நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் நாணயசுழற்சியில் வென்ற இந்தியா அவுஸ்திரேலியாவை துடுப்பெடுத்தாட அழைத்தது. இந்திய இளம் வீரர் பும்ரா தனது முதல் ஒருநாள் போட்டியில் களமிறக்கப்பட்டார். முந்தைய போட்டிகளைப் போலவே அவுஸ்திரேலிய அணி தொடர்ந்து அதிரடி ஆட்டத்த வெளிப்படுத்தியது. ஒரு பக்கம் ஃபின்ச், ஸ்மித், வார்னர் என ஆட்டமிழந்தாலும், மறுபக்கம் டேவிட் வார்னர் மும்முரமாக ஓட்டங்களை சேர்த்து வந்தார்.

5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மிட்சல் மார்ஷ், வார்னர் ஜோடி 118 ஓட்டங்களை வெறும் 105 பந்துகளில் குவித்தது. வார்னர் 100 பந்துகளில் சதத்தை எட்டினார். மார்ஷ் 47 பந்துகளில் அரை சதம் எடுத்தார். வார்னர் 122 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தாலும் மாஷின் அதிரடி தொடர்ந்தது.

வார்னருக்கு பிறகு வந்த வேட், 27 பந்துகளில் 36 ஓட்டங்களை அதிவேகமாக குவித்து விட்டு ஆட்டமிழந்தார். 50-வது ஓவரில் மார்ஷ் சதத்தை எட்டினார். இதற்கு அவர் 81 பந்துகள் மட்டுமே எடுத்துக் கொண்டார். முடிவில் அவுஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 330 ஓட்டங்களை எடுத்தது.

பின்னர் 330 ஓட்டங்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஷிகர் தவன், ரோஹித் சர்மா இருவரும் சிறப்பான தொடக்கத்தை தந்தனர். இவர்களது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 68 ஓட்டங்களை எட்டியது.

தொடர்ந்து ஷிகர் தவன் 42 பந்துகளில் அரை சதம் எட்டினார். ஆனால் அவரின் அதிரடி ஆட்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 78 ஓட்டங்களுக்கு தவன் ஆட்டமிழந்தார். அடுத்து ஆட வந்த கோலி வெறும் 8 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

களத்தில் இணைந்த ரோஹித் சர்மா, மனீஷ் பாண்டே ஜோடி, சற்று தடுமாற்றம் கண்டபோதும் ஓட்ட சேர்ப்பை மீண்டும் சரியான தடத்துக்கு கொண்டு வந்தது. ரோஹித் சர்மா 60 பந்துகளில் அரை சதம் எட்டினார். மணீஷ் பாண்டேவும் அவ்வபோது சிக்ஸர், பவுண்டரிகள் என விளாசித் தள்ளினார்.

சிறப்பாக ஆடி வந்த ரோஹித் சர்மா 35-வது ஓவரில் 99 ஓட்டங்களுக்கு துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். 15 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் மீதமிருக்க 100 ஓட்டங்கள் தேவைப்பட்ட அந்த நிலையில் தோனி ஆட வந்தார். ஆனால் அவர் வழக்கத்துக்கு மாறான நிதானத்தை கடைபிடித்தார். பாண்டே 38 பந்துகளில் அரை சதம் எடுத்தார். முடிந்த வரை பாண்டே 2 ஓட்டங்கள், பவுண்டரிகள் என எடுத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் மறுமுனையில் தோனி ஓட்டங்களை சேர்க்க திணறினார்.

தேவைப்படும் சராசரி அதிகரித்துக் கொண்டே வர, ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியது. 3 ஓவர்களில் 35 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், 48-வது ஓவரில் தோனி தனது முதல் பவுண்டரியை அடித்தார். அதே ஓவரில் பாண்டே அடித்த பவுண்டரியோடு சேர்த்து மொத்தம் 13 ஓட்டங்கள் வந்தது. 49-வது ஓவரில் 9 ஓட்டங்கள் வர கடைசி ஓவரில் 13 ஓட்டங்கள் தேவையாயிருந்தது.

50-வது ஓவரின் முதல் பந்து வைட் என அறிவிக்கப்பட, 2-வது பந்தை தோனி சிக்ஸருக்கு விளாசினார். ஆனால் அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 4 பந்துகளில் 6 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் களத்தில் இருந்த மனீஷ் பாண்டே அடுத்த பந்தை பவுண்டரிக்கு அனுப்பி (80 பந்துகளில்) சதத்தை எட்டினார். இந்தியாவின் வெற்றி ஏறக்குறைய உறுதியாக, அடுத்த பந்தில் 2 ஓட்டங்கள் எடுத்து இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது.

தனது 4-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் மனீஷ் பாண்டேவின் முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தொடரை இழந்து 4 போட்டிகளிலும் தோல்வி கண்டிருந்த இந்தியாவுக்கு இது கௌரவ வெற்றியாக அமைந்துள்ளது.

Related Posts