இந்தியா தனது நடுநிலைமைக்கு விரைவில் பதிலளிக்கும்: மகாலிங்கம்

makalingamஜெனீவா மனித உரிமைகள் அமர்வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்திற்கு இந்தியா நடுநிலை வகித்தமையால் இந்தியா தமிழ் மக்களைவிட்டு விலகிவிட்டது என்று அர்த்தமில்லை’ என இந்திய கொன்சலட் ஜெனரல் வே.மகாலிங்கம் சனிக்கிழமை(29) தெரிவித்தார்.

‘நடுநிலை வகித்தால்தான் நாம் மக்களுக்கு உதவி செய்யலாம். ஏன் நடுநிலையாக நின்றோம் என்பதற்கான விளக்கத்தை இந்தியா விரைவில் தெளிவுபடுத்தும்’ என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

மாற்றலாகிச் செல்லும் இந்திய கொன்சலட் ஜெனரல் வே.மாகலிங்கத்திற்கான பிரியாவிடை நிகழ்வு இந்து சமயப் பேரவையின் ஏற்பாட்டில் யாழில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்..

‘யாழ்.பொது நூலகத்திற்கும் புல்லுக் குலத்திற்கும் இடையில் 1300 மில்லியன் ரூபா செலவில் யாழ்.கலாசார மையம் ஒன்றினை அமைத்து இந்தியா இலங்கையிடம் ஒப்படைக்கவுள்ளது.

அத்துடன், இந்தியாவின் நிதியுதவியில் சுமார் 350 மில்லியன் ரூபா செலவில் திருக்கேதீச்சர ஆலயத்தின் சிற்பங்கள், மண்டபம் என்பன புனரமைக்கப்படவுள்ளன.

எனக்கு பிறகு யாழ்ப்பாணத்தில் நடராஐன் என்பவர் கொன்சலட் ஜெனரலாகப் பணிபுரியவுள்ளார். பிரிட்டிஸ் டயானாவில் நான் பணிபுரிய உள்ளேன். இதை நான் தேர்ந்தெடுத்தமைக்கான காரணம் யாழ்ப்பாணம்தான். யாழில் நான் 3 வருடம் கடமையாற்றியதை எண்ணி பெருமையடைகிறேன்.

தூதரகத்தின் சாதாரண வேலைகளுக்கு அப்பால் மாவட்ட வளர்ச்சியில் எனது பங்கு இருந்தமை மகிழ்ச்சி. அனுபவம் என்பது ஒரு அறிவு அதனை தந்தது யாழ்ப்பாணம்’ என்று அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.

Related Posts