இந்தியா தனக்கு மதிப்பு கொடுக்கவில்லை என்று நவாஸ் ஷெரிப் அதிருப்தி

ரேந்திரமோடி பிரதமராக பதவியேற்ற விழாவுக்கு வருகை தந்தபோது, இந்தியா தன்னை கையாண்ட விதத்தால் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் அதிருப்தியடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

-pakistani-prime-minister-nawaz-sharif1-600

நவாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி மூத்த தலைவர் ஒருவர் அந்த நாட்டு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இத்தகவலை தெரிவித்துள்ளார். இந்திய பிரதமராக நரேந்திரமோடி கடந்த மாதம் 26ம்தேதி பதவியேற்றபோது சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அதில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த அழைப்பை ஏற்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் இந்தியா வந்தார். அப்போது நவாஷ் ஷெரிப்பின் தாயாருக்கு சால்வையொன்றை நரேந்திரமோடி பரிசாக கொடுத்தனுப்பினார். இதற்கு பதிலாக பாகிஸ்தான் சென்ற பிறகு நவாஸ் ஷெரிப், மோடியின் தாயாருக்கு சேலை ஒன்றை பரிசாக அனுப்பினார்.

இதுபோன்ற நடவடிக்கைகளால், இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு பேணப்படுவதை போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டிருந்த நிலையில் இப்போது பாகிஸ்தான் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது

நவாஸ் ஷெரிப்பை தலைவராக கொண்ட பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவர் அந்த நாட்டு முன்னணி பத்திரிகையொன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் “பல வகையில் இந்தியாவின் அணுகுமுறை ஷெரிப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இரு நாட்டு பிரதமர்களும் சந்தித்து பேசியபிறகு கூட்டு பத்திரிகையாளர் சந்திப்புக்கு இந்தியா ஏற்பாடு செய்யவில்லை. ஷெரிப்புடன் இந்தியா சென்ற பாகிஸ்தான் குழு, இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பத்திரிகைகளுக்கு அறிக்கையளிக்க தயாராக இருந்தது. ஆனால் இந்தியா இதை ஏற்காமல் இந்தியா சார்பிலான அறிக்கையை மட்டும் பத்திரிகைகளுக்கு அளித்தது.

அதில் பாகிஸ்தானின் நிலைப்பாடு குறித்த எந்த தகவலும் இடம்பெறவில்லை. இந்தியா அளித்த பத்திரிகை செய்தியில், ஷெரிப்பின் பெயரை தொட்டுக்கொண்டுள்ளார்களே தவிர, ஆலோசனையில் அவர் கலந்துகொண்டதற்கான உரிய முக்கியத்துவத்தை அளிக்கவில்லை.

இந்தியாவால் அளிக்கப்பட்ட தகவல் குறைவுபட்ட பத்திரிகை செய்தியை பார்த்துவிட்டுதான் நவாஸ் ஷெரிப் தனியாக ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தை நடத்தி பாகிஸ்தான் நிலைப்பாட்டை எடுத்துக்கூற வேண்டியதாயிற்று.

இவ்வாறு அந்த மூத்த தலைவர் தெரிவித்ததாக பாகிஸ்தான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா சென்ற பாகிஸ்தான் பிரதமரை, மோடி அரசு பள்ளி மாணவனைப்போல நடத்தியதாக தெரீக்-இ-இன்சாப் தலைவர் இம்ரான்கான் குற்றம் சாட்டியிருந்தது நினைவு கூறத்தக்கது.

Related Posts