இந்தியா எமது அயல் நாடு அதற்காக எங்கள் கடல்வளங்கள் அழிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது- கடற்தொழில் அமைச்சர்

SAM_1093 copy

இரண்டு நாள் விஜயமாக யாழ்ப்பாணம் வருகைதந்துள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அரமவீர ஞாயிற்றுக்கிழமை (10) மீனவர் சங்கங்களின் பிரதிதிகளைச் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது இந்திய மீன்பிடிப் படகுகளால் தமது கடல்வளங்கள் அழிக்கப்படுவதாகவும் தம்மால் தொழில் செய்ய முடியாதிருப்பதாகவும் யாழ்ப்பாண மீனவர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

அவர்களிற்கு பதிளித்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இது தசாப்தங்கள் தாண்டிய பிரச்சினை. இந்தியா எமது அயல் நாடு இந்தியாவைப் பகைத்துக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை. அதற்காக எங்கள் கடல்வளங்கள் அழிக்கப்படுவதை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

SAM_1098 copy

இந்திய மீனவர்களைத் தடுப்பதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டுவருகின்றோம். இது தொடர்பாக நீங்கள் ஜனாதிபதியைச் சந்தித்தபோதும் கூறியிருந்தீர்கள். உங்கள் பிரச்சினைகளை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். எமது கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களின் படகுகளையும் வலைகளையும் கைப்பற்றுமாறு அண்மையில் ஒரு தீர்மானம் எடுத்திருக்கின்றோம். அதன்பொருட்டு கைப்பற்றும் படகுகளையும் உபகரணங்களையும் எச்சந்தர்ப்பத்திலும் மீளளிக்க மாட்டோம். இந்திய மத்திய அரசு தலையிட்டாலும் படகுகளை மீளளிப்பதற்கு சாத்தியமில்லை.

சட்டரீதியான நடவடிக்கைகளோடு இந்திய மீனவர்களை மட்டும் விடுவிப்போம். ஏனெனில் அவர்கள் படகுகளின் உரிமையாளர்கள் இல்லை என்பது எமக்குத் தெரியும். அவர்கள் கூலிக்காக வேலை செய்பவர்கள். தைப்பொங்கல் முடிந்தபின் தைமாத இறுதிப்பகுதிக்குள் எதிர்ப்பு நடவடிக்கையாக இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின்  மீன்பிடிப் படகுகளையும் அவர்களது மீன்பிடி உபகரணங்களையும் கைப்பற்றுமாறு கடற்படையினருக்கு உத்தரவு பிறப்பிக்கின்றேன்.எக் காரணம் கொண்டும் அவற்றை நாங்கள் மீளளிக்கப்போவதில்லை எனத் தெரிவித்தார்.

Related Posts