“இந்தியா எந்த நாடு முன்பும் மண்டியிடாது”- மோடி

விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் நரேந்திரமோடி, தேச பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

-narendra-modi

கோவாவை ஒட்டிய அரபிக்கடலில் நிறுத்தப்பட்டிருந்த போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் பயணிப்பதற்காக டெல்லியில் இருந்து இன்று காலை விமானத்தில் பானாஜி வந்த மோடி, அங்கிருந்து ‘கடல் ராஜா’ என்று பெயரிடப்பட்ட கடற்படைக்கு சொந்தமான, ஹெலிகாப்டரில் கப்பலுக்கு சென்றார். அங்கு கடற்படை அதிகாரிகள் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கப்பலின் தன்மை குறித்து அவர்கள் மோடிக்கு விளக்கம் கொடுத்தனர்.

கப்பலில் நிறுத்தப்பட்டிருந்த மிக் 29 ரக விமானத்தில் அமர்ந்தபடி அந்த விமானத்தின் சிறப்பம்சங்களை மோடி கேட்டறிந்தார். இதன்பிறகு ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவை நாட்டுக்கு அர்ப்பணித்தார் நரேந்திரமோடி.

அப்போது கடற்படை அதிகாரிகள் மத்தியில் பேசிய மோடி “ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவை நாட்டுக்கு அர்ப்பணித்த இந்த நாள் மிகவும் முக்கியமானது என்பதை உணர்கிறேன். எனது அரசு ஒரு ரேங், ஒரு பென்சன் திட்டத்தை பாதுகாப்பு துறையிலுள்ள ஊழியர்களுக்கு செயல்படுத்த உறுதியாக உள்ளது. இதுகுறித்து ஏற்கனவே பலரும் உங்களுக்கு உறுதிமொழி அளித்திருந்தாலும் இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால் இந்த அரசு ஒரு ரேங், ஒரு பென்சன் திட்டத்தை அமல்படுத்தியே தீரும்.

நாட்டின் பாதுகாப்பு எனது முக்கியமான குறிக்கோளில் ஒன்றாகும். நாம் உலகில் எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தல் விளைவிக்க கூடாது. அதேபோல எந்த நாடு முன்பும், நாம் மண்டியிட்டு நிற்கும் நிலை வரக்கூடாது. இன்னும் எத்தனை நாளுக்குதான் நாம் பிற நாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்கிக்கொண்டிருக்க வேண்டும். இனிமேல் நமது நாட்டில் இருந்து பிற நாடுகள் ஆயுதம் வாங்கும் நிலைக்கு நாம் வரவேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியை நமக்கு சாதகமாக்க வேண்டும்” என்றார். பாதுகாப்பு துறை அமைச்சர் அருண்ஜெட்லி மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் இந்த நிகழ்வில் உடன் இருந்தனர்.

ரஷ்யாவிடமிருந்து ரூ.15ஆயிரம் கோடி அளித்து வாங்கப்பட்ட விக்ரமாதித்யா போர்க்கப்பல், 44,500 டன் எடை கொண்டது. 284 மீட்டர் நீளமும், 60 மீட்டர் உயரமும் பரப்பளவாக கொண்ட இந்த கப்பலை 3 கால்பந்தாட்ட மைதானங்களுக்கு ஈடாக கூறலாம். ஒரே நேரத்தில் இக்கப்பலில் 1600 பேர் பயணிக்கலாம். ஒரு லட்சம் முட்டைகள், 20 ஆயிரம் லிட்டர் பால், 16 டன் அரிசி ஆகியவற்றை சேமித்து வைக்க இதில் வசதியுள்ளது. இது ஒரு விமானம் தாங்கி போர்க் கப்பலாகும்.

Related Posts