இந்தியா – இலங்கை இடையே சாலை அமைக்கும் பேச்சு தொடக்கம்

இந்தியா – இலங்கைக்கு இடையே, சாலை அமைக்கும் திட்டம் தொடர்பான பேச்சு, அடுத்த மாத இறுதிக்குள் தொடங்கவுள்ளது.

இந்திய மத்திய, சாலை போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் இது குறித்து கூறியதாவது,

அண்டை நாடுகளுடன் வர்த்தக ரீதியான உறவை மேம்படுத்துவதற்கு, போக்குவரத்து வசதி மிகவும் முக்கியம் என, மத்திய அரசு கருதுகிறது.

பங்களாதேஷ், பூடான், நேபாளம் ஆகிய நாடுகளுடன் சாலை போக்குவரத்தை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இலங்கையுடனும், சாலை போக்குவரத்தை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு ஆர்வமாக உள்ளது.

இலங்கையின் தலைமன்னாரில் இருந்து, இந்தியாவின் தனுஷ்கோடி வரை, கடலுக்கு மேல் பாலம் காட்டியும், கடலுக்குள் சுரங்கம் அமைத்தும், சாலை அமைக்கும் திட்டம் தயாராகியுள்ளது.

இந்த சாலை திட்டம், 22 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படவுள்ளது. இதையடுத்து, இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான அதிகாரப்பூர்வ பேச்சு, இரு நாட்டு அதிகாரிகளுக்கு இடையே, அடுத்த மாத இறுதியில் தொடங்கவுள்ளது.

Related Posts