இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூரில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் மணிஷ் பாண்டே நீக்கப்பட்டு ரிஷாபா பாந்த் சேர்க்கப்பட்டார்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்து, இங்கிலாந்து அணிக்கு 203 ரன்கள் இலக்காக நிர்னயித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரெய்னா 63 ரன்களும், தோனி 56 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து சார்பில் மில்ஸ், ஜோர்டான், ஸ்டோக்ஸ், ப்ளன்கிட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
203 என்ற கடின இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியின் துவக்க வீரரான சாம் பில்லிங்ஸ் 8 ரன்களுக்கு யுஸ்வேந்திரா சாஹல் பந்தில் ஆட்டமிழந்தார். துவக்கத்திலேயே விக்கெட்டை பறிகொடுத்த இங்கிலாந்து அணியின் மற்றொரு துவக்க வீரரான ஜாசன் ராய் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய இந்திய பவுலர்கள் சீரான இடைவெளியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்கு அனுப்பினர். 16. 3 ஓவரில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் யுஸ்வேந்திரா சாஹல் நான்கு ஓவர்களுக்கு 25 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்களை கைபற்றினார். இவருடன் பும்ராவும் தன் பங்கிற்கு 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
6 விக்கெட்டுகளை கைப்பற்றிய யுஸ்வேந்திரா சாஹல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் விருதும் சாஹலுக்கே வழங்கப்பட்டது.
3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் இந்தியா 2 -1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இதேவேளை 2006-ம் ஆண்டு முதல் சர்வதேச 20 ஓவர் போட்டியில் விளையாடி வரும் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனியால் ஒரு அரைசதம் கூட அடிக்க முடியவில்லையே என்று அடிக்கடி விமர்சனங்கள் எழுவது உண்டு.
கேப்டன்ஷிப்பில் பல சாதனைகளை படைத்த அவருக்கு ஏனோ அரைசதம் மட்டும் எட்டாக்கனியாக இருந்து வந்தது. 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 48 ரன்கள் எடுத்ததே நீண்ட காலமாக அவரது அதிகபட்சமாக நீடித்தது. இந்த நிலையில் சமீபத்தில் கேப்டன் பதவியை துறந்தார்.
இப்போது அவரது அரைசத கனவும் நனவாகியுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் 4-வது வரிசையில் இறங்கி அட்டகாசப்படுத்திய டோனி 50 ரன்களை முதல்முறையாக கடந்தார். 35 வயதான டோனிக்கு இது 76-வது 20 ஓவர் சர்வதேச போட்டியாகும்.