இந்தியா அபாரம்: சுருண்டது பாகிஸ்தான்

பாண்ட்யாவின் அசத்தலான பந்துவீச்சால் 83 ஓட்டங்களுக்கு பாகிஸ்தானை சுருட்டிய இந்தியா 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

பங்களாதேஷில் நடக்கும் ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நேற்று சனிக்கிழமை இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணி களத்தடுப்பைத் தெரிவு செய்தது.

பாகிஸ்தானுக்கு தொடக்கம் கொடுத்த ஹபீஸ் (4), சர்ஜில்கான் (7), என ஆட்டமிழந்தனர். அடுத்து வந்தவர்களும் நிலைக்கவில்லை. ஐந்தாவது வீரராக இறங்கிய சர்பிரஸ் அஹமட் நிதானமாக 25 ஓட்டங்களை சேர்த்தார். அப்ரிடி 2 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்களும் வேகமாக பெவிலியன் திரும்பவே 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த பாகிஸ்தான் அணி 83 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில் அசத்திய இந்தியாவின் பாண்ட்யா 3 விக்கெட்களையும் ஜடேஜா 2, நெஹ்ரா, யுவராஜ், பும்ரா ஆகியோர் ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இலகுவான இலக்கு நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளித்தது. ஆமிரின் வேகத்தில் ரோகித், ரஹானே டக் அவுட் ஆகினர். கோலி நிதானமாக ஆட ரெய்னா ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். சிறப்பாக ஆடிய கோலி 49 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க பாண்ட்யா டக் அவுட் ஆனார்.

அடுத்து இறங்கிய டோனி பௌண்ட்ரி விளாச இந்தியா 15.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 85 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது. யுவராஜ் 14, டோனி 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழ்க்காமல் இருந்தனர். பாகிஸ்தானின் பந்து வீச்சில் ஆமிர் 3, சமி 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகனாக கோலி தெரிவானார்.

Related Posts