இந்தியாவை வென்றது இலங்கை!

சுதந்திரக் கிண்ண மும்முனை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி இந்திய அணியை 5 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் பங்குபற்றும் சுதந்திரக்கிண்ண முத்தரப்பு இருபதுக்கு – 20 கிரிக்கெட் தொடர் நேற்று கொழும்பில் ஆரம்பமானது.

ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நேற்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் விளையாடின.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி இந்திய அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றது.

இந்திய அணி சார்பில் தவான் 90 ஓட்டங்களையும் பாண்டியா 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் சாமிர 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்நிலையில் 175 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி குஷல் ஜனித்தின் அதிரடியில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்த இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிரடியாக விளையாடிய குஷல் ஜனித் பெரேரா 66 ஓட்டங்களையும் திஸர பெரேரா ஆட்டமிழக்காது 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் வொஷிங்டன் சுந்தர் மற்றும் ஷால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி 2 புள்ளிகளைப்பெற்று முன்னிலையிலுள்ளது.

Related Posts