இந்தியாவுக்கு எதிராக இலங்கை கர்வத்துடனும், திமிருடனும் விளையாடவேண்டும்: சங்கா

இந்தியாவுக்கு எதிராக நாளை நடைபெறும் லீக் போட்டியில் இளம் வீரர்களை கொண்ட இலங்கை அணி கர்வத்துடனும், திமிருடனும் விளையாட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார விருப்பம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் சபையின் இணையதளத்துக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நம்பிக்கையுடன் ஆக்ரோஷமாக இலங்கை அணி விளையாட வேண்டும். அதனை இலங்கை அணி செய்தால் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கலாம். பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தி இருக்கும் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக செயற்படுவது என்பது எளிதான காரியம் அல்ல.

உடல் தகுதி பெற்று மெத்யூஸ் இந்த போட்டியில் விளையாடினால் அது இலங்கை அணியின் நம்பிக்கையை அதிகரிக்கும். அதேநேரத்தில் இலங்கை அணி தனது ஓட்ட விகிதத்தை உயர்த்த முயற்சிக்க வேண்டும். தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதால் உபுல் தரங்க தடைக்கு ஆளாகி இருப்பது பெரிய இழப்பாகும்.

அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளரான மாலிங்க மற்றும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை வைத்துக்கொண்டு இலங்கை அணி பந்து வீசுவதற்கு கூடுதலாக 39 நிமிடங்களை எடுத்துக்கொண்டமை ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts