Ad Widget

இந்தியாவுக்குள் நுழைய முற்பட்ட வடமராட்சி மீனவர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் இந்திய கடல் எல்லைக்குள் நுழைய முற்பட்ட வடமராட்சி பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்களை, ஞாயிற்றுக்கிழமை (03) இரவு கைது செய்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி, திங்கட்கிழமை (04) தெரிவித்தார்.

தொண்டைமானாறு, அக்கரை பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இரு மீனவர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மூவரும், நாட்டுப்படகு ஒன்றின் மூலம் இந்திய கடல் எல்லைக்குள் சென்றுள்ளனர். கடலோர ரோந்துக்கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் இவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதன்போது, அவர்கள் மூவரும் வழங்கிய தகவல் முன்னுக்குப் பின் முரணான வகையில் அமைந்துள்ளதுடன், அவர்களின் நடவடிக்கை சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், நீண்ட தூரத்துக்கு இவர்கள் நாட்டு படகைப் பாவித்தமை மேலும் சந்தேகத்தினை ஏற்படுத்தியதால் அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதாக கூறினார்.

கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மூவரும் கஞ்சா எடுத்து வருவதற்கு சென்றார்களா? என்பது தொடர்பில் விசாரணைகளை கடற்படை புலனாய்வு துறையினர் மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related Posts