இந்தியாவில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததைவிட கூடுதலாக பத்து அணுமின் நிலையங்கள் தொடங்கப்படும் என்று இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையம் வெற்றிப்பெறுள்ளதாகவும் அதனையடுத்தே இந்த முன்னெடுப்பு எடுக்கப்படுவதாகவும் இந்தியா வந்திருக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனான சந்திப்புக்கு பிறகு இந்தியப் பிரதமர் இதை கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் ரஷ்ய நாட்டுத் தலைவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளின் முடிவில், இராணுவம், அணுசக்தி, தகவல் பரிமாற்றம், உட்கட்டமைப்பு மேம்பாடு, வர்த்தகம் உட்பட கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் இருபது ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
கூட்டாக செய்தியாளர்களை இரு தலைவர்களும் சந்தித்த போது, இந்திய-ரஷ்ய உறவுகள் என்றென்றும் போற்றப்படும் என்று இருவருமே உறுதியளித்தனர்.
“இந்தியாவில் தயார் செய்யுங்கள்” என்கிற தமது புதிய முன்னெடுப்பின் கீழ் இந்தியாவில் ரஷ்யப் பொருட்களின் உற்பத்தியை பெருக்க ரஷ்ய அரசும் தொழிலதிபர்களும் முன்வர வேண்டும் என்றும் மோடி கோரியுள்ளார்.
இந்தியா ரஷ்யாவுக்கு இடையில் அணுசக்தி திட்டம் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் கையெழுதாகியுள்ளதை விமர்சித்துள்ள அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் நிறுவனர் கூடங்குளம் உதயகுமார், இப்படியான உடன்பாடுகள் ரஷ்யாவுக்கு லாபத்தையும் இந்தியாவுக்கு நட்டத்தையுமே ஏற்படுத்துகின்றன என்று விமர்சித்துள்ளார்.